மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 ஜுன் 2021

விஜய் சேதுபதி படம் மூலம் தயாரிப்பாளராகும் சீனுராமசாமி

விஜய் சேதுபதி படம் மூலம் தயாரிப்பாளராகும்  சீனுராமசாமி

மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் தொழில் கற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. படைப்பு ரீதியாகத் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க, பாராட்டுகளைப் பெறக்கூடியவர்களாக பாலுமகேந்திரா உதவியாளர்கள் சமகாலத்திலிருந்து வருகின்றனர்.

பாலா, வெற்றிமாறன், ராம் அந்த வரிசையில் பரத் இருவேடங்களில் நடித்து வெளியான கூடல் நகர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சீனு ராமாசாமி. அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

அவரை கவனிக்கத்தக்க இயக்குநராகத் தமிழ் சினிமாவுக்கும், பொதுவெளிக்கும் அடையாளம் காட்டியது 70 லட்ச ரூபாயில் 37 நாட்களில் தயாரிக்கப்பட்ட தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம். இந்தப்படத்தில் தான் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பின் சீனுராமசாமி மற்ற கதாநாயகர்கள் நடித்த படங்களை இயக்கினாலும் அந்தப் படங்கள் சீனுராமசாமிக்கு வெற்றியைப் பெற்று தரவில்லை.

மீண்டும் தர்மதுரை படத்தின் மூலம் இணைந்த இக்கூட்டணி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது. அரசியல் வாதிகள் சீனுராமசாமியை தேடிப் பிடித்து பாராட்டிய படமாக மாறியது தர்மதுரை. அதற்கு முன்னரே இவர் இயக்கத்தில் இடம் பொருள் ஏவல்,மாமனிதன் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இந்தப் படங்கள் வெளியாகவில்லை.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஐந்தாவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் பணிகள் நடைபெற்று வருவதாக சீனுராமசாமி தரப்பில் கூறுகின்றனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவருக்காக முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரித்துக் கொடுக்க போவது இயக்குநர் சீனுராமசாமி என்கின்றனர். கோடம்பாக்கம் வட்டாரத்தில் முதல் பிரதி தயாரிப்பு செலவுக்கான பட்ஜெட் 20 கோடி ரூபாய் என்று கலைப்புலி எஸ்.தாணு நிர்ணயித்திருக்கிறார்.

அதை வைத்துக் கொண்டு படமெடுத்துக் கொடுக்கவேண்டியது சீனுராமசாமியின் கடமையாகும். விஜய்சேதுபதி தற்போது ஒரு படத்தில் நடிக்க பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதனை குறைத்து அல்லது அதிகப்படுத்திக் கொடுப்பது படத்தின் தயாரிப்பாளரான சீனுராமசாமியின் பொறுப்பு. எஞ்சிய பணத்தில் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான சம்பளம், படப்பிடிப்பு செலவுகளை செய்ய வேண்டும்.

பாலு மகேந்திரா தான் இயக்கும் படங்களுக்கான பட்ஜெட்டை தயார் செய்துகொண்டு அதற்குள் படம் எடுக்கத் திட்டமிட்டு செயலாற்றும் குணாம்சம் கொண்டவர். அதை தான் வெற்றிமாறன் கடைப்பிடிக்கிறார். அந்த வழியைத் தென்மேற்கு பருவக்காற்றுக்கு பின் விஜய் சேதுபதி படத்தில் பயன்படுத்த காத்திருக்கிறார் சீனுராமசாமி. இவர் முழுமையான திரைக்கதையை எழுதி வைத்துத் தயாராக இருப்பதால் திட்டமிட்டபடி, அந்தத் தொகைக்குள் படம் தயாராகிவிடும் என்கிறார்கள்.

-இராமானுஜம்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

திங்கள் 21 ஜுன் 2021