மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 ஜுன் 2021

ஈழத்தமிழர்களுக்கு எதிரான படமா ஜெகமே தந்திரம் ?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான படமா ஜெகமே தந்திரம் ?

பாலிவுட் நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ் நடிப்பில் பிரைம் வீடியோவில் வெளியான வெப் சீரிஸ் ஃபேமிலி மேன். இந்த வெப் சீரிஸை ராஜ் & டி.கே. இயக்கியுள்ளனர். இந்த வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சமீபத்தில் இரண்டாவது சீசன் வெளியானது. இந்தியாவின் பாதுகாப்பை சிதைக்கும் விதமாக வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகளை கண்டறியும் உளவுத்துறை அதிகாரியின் கதையே களம். முதல் சீசனில் முஸ்லீம்களை தீவிரவாதியாக காட்சிப்படுத்தியிருந்தனர். அப்படியே, இரண்டாவது சீசனில் தமிழ் ஈழ போராளிகளை தீவிரவாதியுடன் கூட்டணி வைத்திருப்பது போல படத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழீழப் போராளியாக சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸூக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இன்னொரு சம்பவமாக ‘ஜெகமே தந்திரம்’ ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், வடிவுக்கரசி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘ஜெகமே தந்திரம்’. மதுரை ரவுடி லண்டன் கேங்ஸ்டர்களுடன் சேர்ந்து செய்யும் வில்லத்தனங்களே படத்தின் களம். இதற்குள் தமிழீழப் பிரச்னை, அகதிகளின் சிக்கல்களை படம் பேசியிருக்கிறது.

தமிழீழ மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, அவர்களை தவறாகக் காட்சிப்படுத்தியிருப்பதாக இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் இலங்கைத் தமிழர்கள் மாஃபியா வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை படம் உருவாக்குகிறது. நாட்டு வெடி வைத்து லண்டன் மக்களை கொலை செய்வது போலவும், தங்க கடத்தல், துப்பாக்கி கடத்தல்களைச் செய்வது போலவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தனுஷ் உள்ளிட்ட அனைவருமே அசால்டாக துப்பாக்கியை எல்லா இடங்களில் பயன்படுத்துகிறார்கள். லண்டன் மாதிரியான வளர்ந்த நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரத்தை இலங்கைத் தமிழர்கள் கொண்டுவருவது போன்ற தவறான சித்தரிப்பு படத்தில் இடம்பெறுவதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

யாருக்கு சாதகமான படம் இது என்கிற கேள்வியும் எழுகிறது. 190 நாடுகளில் 17 மொழிகளில் டப் செய்து உலகம் முழுவதும் படம் வெளியாகியிருக்கிறது. உலக மக்கள் பார்வைக்குச் செல்லும் இப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தவறாக சித்தரிக்கும் விதமாக காட்சிகள் அமையலாமா? கனடா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இந்நிலையில், அவர்களை வன்முறையில் ஈடுபடுபவர்களாக காட்டினால் நாட்டை விட்டு வெளியேற்றும் எண்ணம் பிற நாட்டு மக்களுக்கு எளிதில் தோன்றவும் வாய்ப்பு அதிகம்.

இலங்கைப் பிரச்னை குறித்தோ, அகதிகள் படும் பாடு குறித்தோ எந்த விதமான அடிப்படை அறிவும் இல்லாமல், யாருக்கு சாதகமாக படம் எடுத்திருக்கிறோம் என்றும் தெரியாமல் உருவாகியிருக்கிறது ஜெகமே தந்திரம்.

தமிழில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான படத்தில் கர்ணனாக அவதாரம் எடுத்தவர், தந்திரக் கார இயக்குநரிடம் சிக்கி தரித்திரமாகிவிட்டதாகவே தனுஷை இணையத்தில் வசைபாடுகின்றனர்.

திருநங்கைகளை பாடல்காட்சிகளில் நடனமாடவும், இரட்டை அர்த்த வசனக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் , முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகளாகவும், ஸ்லீப்பர் செல்களாக நம்முடன் ஊடுறுவியிருப்பார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் என்றாலே ஆபத்தானவர்கள் என்றும் படங்களில் காட்சிப்படுத்தும் அபத்தங்களை இயக்குநர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். வசூலுக்காகவும், வியாபாரத்துக்காகவும் மற்றவர்களை ஊறுகாயாக தொட்டுக் கொள்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

விவசாயப் பிரச்னையை படத்தில் பேசுவது மாதிரி தமிழீழப் பிரச்னை படத்தின் வியாபாரத்துக்காக இந்திய சினிமா கையில் எடுத்துவிட்டதோ எனும் அச்சம் தோன்றுகிறது. எந்த சமூகத்தையும், இனத்தையும் புண்படுத்தாத கதையம்சம் கொண்டதாக கமர்ஷியல் படங்கள் இருக்க வேண்டும். ஜாலியான படமென்று சொல்லிவிட்டு, அதற்குள் தவறான சித்தரிப்புகளைப் படத்தில் வைக்கக் கூடாது என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

- தீரன்

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

திறந்தவெளியில் ஜெய்பீம் படத்தைக் கண்டுகளித்த மக்கள்!

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

2 நிமிட வாசிப்பு

பிரமாண்டமாக நடக்கும் கத்ரினா கைப் திருமணம்!

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

2 நிமிட வாசிப்பு

கபில் தேவ் உரிமையைப் பெற்ற பிரித்வி ராஜ்

சனி 19 ஜுன் 2021