மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

மிமிக்ரி கலைஞரை திருத்திய பிருத்விராஜ் சுகுமாறன்

மிமிக்ரி கலைஞரை திருத்திய பிருத்விராஜ் சுகுமாறன்

சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோர் ஏராளம், அதேபோல் தவறான செயலுக்கு இதனை பயன்படுத்திக் கொள்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

இந்த செயல்களை தடுக்க காவல் துறையில் புகார் செய்து பரபரப்பை ஏற்படுத்துபவர்களுக்கு மத்தியில், தவறு நடைபெற்ற பொது தளம் மூலமாகவே மென்மையாக அதேநேரம் ஆக்கபூர்வமாக தவறு செய்தவர், தண்டிக்கப்படாமல் தவறை உணரும் வகையில் தன்னுடைய பெயரில் பேக் ஐடியைத் துவக்கி, தன்னை மாதிரியே மிமிக்ரி வாய்ஸில் பேசிய ஒருவரை மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் கண்டறிந்து கண்டித்து அறிவுறுத்தியுள்ளார்.

இணையத்தில் சமூக வலைதளங்களில் மாதத்திற்கு பல புதிய அப்ளிகேஷன்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் புதிதாக வந்திருக்கிறது ‘கிளப் ஹவுஸ்’ என்ற அப்ளிகேஷன்.

இந்த அப்ளிகேஷனில் ஆளுக்கொரு ரூமை கிரியேட் செய்து அதில் தங்களது நண்பர்களை இணைத்துக் கொண்டு ஒரே குழுவாக அரட்டையடிக்கலாம். நண்பர்கள் அல்லாதவர்களுக்கு இங்கே பேசுவது எதுவும் தெரியாது. கேட்காது என்பதால் சமீப நாட்களில் இந்த அப்ளிகேஷனுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்த அப்ளிகேஷனில் சூரஜ் என்பவர் நடிகர் பிருத்விராஜின் பெயரில் ஒரு போலி ஐடியை உருவாக்கியிருக்கிறார். கூடவே நண்பர்களாக பலரையும் சேர்த்திருக்கிறார். அந்தக் குழுவில் நடிகர் பிருத்விராஜே இந்தக் குழுவை ஆரம்பித்திருப்பதாக நம்ப வைத்து, அவருடைய குரலிலேயே பேசவும் செய்திருக்கிறார் சூரஜ்.

இதனை உடனேயே பிருத்விராஜின் கவனத்திற்குப் பலரும் கொண்டு சென்றதையடுத்து உடனேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளப் ஹவுஸ் அப்ளிகேஷனில் இருப்பது போலியான ஐடி என்று தெரிவித்து சூரஜின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டார் நடிகர் பிருத்விராஜ்.

இதையடுத்து உடனடியாக அந்தக் குழுமத்தைக் கலைத்த சூரஜ் இதற்காக நடிகர் பிருத்விராஜிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.“நான் யாரையும் தாக்க வேண்டும் என்று இதனை ஆரம்பிக்கவில்லை. ஆனால் இது தவறானது. செய்யக் கூடாதது என்பதை உணர்ந்து கொண்டேன். பிருத்விராஜிடம் மன்னிப்பு கோருகிறேன்..” என்றார் சூரஜ்.

இதற்குப் பதிலளித்த நடிகர் பிருத்விராஜ், டியர் சூரஜ் இதுவொரு பெரிய விஷயமே இல்லை, இது யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவையுடன் பேசப்பட்ட விஷயம் என்பதை நானும் உணர்கிறேன்.

ஆனால் இது ஒரு தவறான சூழலை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். கிட்டத்தட்ட 25,000 மக்கள் இந்தப் பேச்சைக் கேட்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பேசுவது நான்தான் என்பதை நம்பியும் இருக்கிறார்கள்.

நான்தான் உண்மையில் பேசுகிறேன் என்று நினைத்து அவர்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இது நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. இது தவறான செயல் என்று நீங்கள் ஒத்துக் கொண்டதற்கு நான் பாராட்டுகிறேன்.

மிமிக்ரி கலை என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். மலையாள சினிமாவில் எல்லாக் காலங்களிலும் இந்த மிமிக்ரி கலை வளர்ந்து உலக சினிமாவரையிலும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது.

படிப்பதை நிறுத்திக் கொள்ளாமல் மென்மேலும் கடுமையாக உழையுங்கள் சூரஜ். உங்களுக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்று நம்பிக்கையூட்டும் வகையில் சொல்லி வாழ்த்தியிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.

-இராமானுஜம்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

வியாழன் 10 ஜுன் 2021