மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

ஆந்தாலஜி படங்களை விரும்பாத ரசிகர்கள்... என்ன காரணம்?

ஆந்தாலஜி படங்களை விரும்பாத ரசிகர்கள்... என்ன காரணம்?

இரண்டுக்கு மேற்பட்ட குறும்படங்களின் தொகுப்பு ஆந்தாலஜி.

இதில் இடம்பெறும் குறும்படங்களின் கதைகள் பெரும்பாலும் ஒரே கருப்பொருள், களத்தை மையமாகக் கொண்டிருக்கும். ஒரே மையக்கருவை எடுத்துக்கொண்டு நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியாகும் ஆந்தாலஜி படங்கள் இந்தி மற்றும் மலையாள சினிமாக்களில் அதிகமாக வெளியாகியிருக்கின்றன.

மலையாளத்தில் குறிப்பிட்டுக் கூறவேண்டுமென்றால், நாலு பெண்ணுகள், ஐந்து சுந்தரிகள், கேரளா கஃபே, சோலோ படங்களைக் கூறலாம். குறிப்பாக, சோலோ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் படமாக்கப்பட்டதோடு நான்கு வெவ்வேறு திரைக்கதைகளை உள்ளடக்கியிருந்தது.

இந்தப் படத்தில் மூன்று ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் மற்றும் 15 பாடல்கள் இடம்பெற்றிருந்தது ஹைலைட். அதுபோல, இந்தியில் ஐஎம், பாம்பே டாக்கீஸ், எக்ஸ்: பாஸ்ட் இஸ் பிரசன்ட், நெட்ஃப்ளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் கோஸ்ட் ஸ்டோரீஸ் ஆகியவை இந்தியில் குறிப்பிடும்படியான படங்கள்.

தமிழிலும் காலம் காலமாக ஆந்தாலஜி படங்கள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகின்றன. 1939ஆம் ஆண்டு வெளியான அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன் ஆகிய தனித்தனி நகைச்சுவை கதைகளின் தொகுப்பாகத் தயாரிக்கப்பட்ட ‘சிரிக்காதே’ தமிழில் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே ஆந்தாலஜிகளுக்கு முன்னோடி எனலாம்.

இதைத் தொடர்ந்து 1941இல் மணிமாலை என்ற ஒரு காமெடி ஆந்தாலஜியை உருவாக்கினார்கள். இப்படியாக, அவ்வப்போது ஆந்தாலஜி படங்கள் எடுக்கப்பட்டாலும், ரசிகர்கள் மனதில் ஆந்தாலஜி எனும் டிரெண்ட் உருவாக்கியது ‘அவியல்’.

கார்த்திக் சுப்பராஜ் முயற்சியில் ஆறு கதைகளின் தொகுப்பாக இந்த அவியல் ஆந்தாலஜி வெளியானது. கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே சிறுகதைக்குரிய தன்மையும் வடிவமைப்பும் கொண்டிருந்தன. ஆனால், ரசிகர்கள் பெரிதாகக் கொண்டாடவில்லை.

அதற்குப் பின்னர், ஆந்தாலஜியாக வெளியான ஒரு படத்தை ரசிகர்கள் அதிகம் கொண்டாடியதென்றால் அது ‘சில்லுக்கருப்பட்டி’. ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அன்பு எனும் ஒற்றை மையக்கருவுக்குள் நான்கு கதைகள் பிணைக்கப்பட்டிருக்கும். பிங்க் நிற பையினுள் நிறைந்திருக்கும் அன்பு, கேன்சர் என்று தெரிந்தே காதல் கொள்ளும் இளைஞி, 60 வயதைத் தாண்டியும் இணையில்லாத காதல், கணவன் மனைவிக்குள்ளான காதல் என ஒவ்வொரு கதையும் ஒவ்வோர் அனுபவத்தைத் தரும்.

இப்படியாக, திரையரங்கில் அவ்வப்போது ஆந்தாலஜி படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், லாக்டவுன் வந்ததால் தமிழின் உச்ச இயக்குநர்கள் ஓடிடி பக்கம் வந்தார்கள்.

அப்படி, வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஆந்தாலஜி படங்களின் மீது ஆர்வம் காட்டினார்கள். மொத்தமாக நான்கு ஆந்தாலஜி படங்கள் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதில் மூன்று ஆந்தாலஜி சீரிஸ் இணையத்தில் வெளியாகியும் விட்டது.

ஒன்று, பிரைம் வீடியோவில் வெளியான புத்தம் புதுக்காலை. சுஹாசினி மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐந்து தனிக்கதைகளாக புத்தம் புது காலை வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ஒன்றுமில்லாமல் போனது. கதையில் இருக்கும் புதுமையே ஆந்தாலஜியின் ஸ்பெஷல். அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுக்காமல் போனது, புத்தம் புது காலை பெரிதளவுக்கு வெளிச்சம் பெறவில்லை.

இரண்டாவது, நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் செய்த ‘பாவக்கதைகள்’. இந்த ஆந்தாலஜியை வெற்றி மாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தார்கள். மொத்தமாக நான்கு கதைகளுடன் சமூகத்தில் நிகழ்வும் வலிமிகுந்த பகுதிகளைப் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

பாவக்கதைகள் ஓரளவுக்கு ரசிகர்களை ஈர்த்தது. குறிப்பாக, சுதாகொங்கராவின் ‘தங்கம்’ கதை பரவலாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் பொதுவாக ஓர் உருட்டு உருட்டியிருந்தார் விக்னேஷ் சிவன்.

மூன்றாவது, காதலும் காதல் நிமித்தமுமாக குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி வெளியானது. இந்த ஆந்தாலஜியை கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் முறையே 'எதிர்பாரா முத்தம்', 'அவனும் நானும்', 'லோகம்', 'ஆடல்-பாடல்' என நான்கு கதைகளை இயக்கியிருந்தனர். இந்த நான்கு கதைகளில் நலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதை மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டது. மற்றதெல்லாம், வேண்டாத ஆணியே.

மேற்கண்ட மூன்று ஆந்தாலஜிகளிலும் இருக்கும் ஒற்றுமை கெளதம் மேனன். யார் ஓடிடியில் ஆந்தாலஜி எடுப்பதாக இருந்தாலும் முதல் ஆளாக ஆஜர் போட்டுவிடுகிறார். அவரின் கதையும் பெரிதாக ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்யவில்லை என்பதே உண்மை.

பல திரைப்படங்களைப் பார்த்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டுமென்பதே ஆந்தாலஜி படங்களின் கான்செப்ட். ஆனால், கடந்த மூன்றிலுமே பெரிதாக கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதோடு, ஒரு கதை சொதப்பினாலும், மொத்த ஆந்தாலஜியும் கெட்டுவிடும். அதை உணர்ந்து இயக்குநர்கள் படங்களின் கதைகளை அமைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இறுதியாக, நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் 'நவரசா' என்ற வெப் ஆந்தாலஜி வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. நவரசங்கள்தான் மையப்புள்ளி. ஒன்பது ரசங்களையும் ஒன்பது இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.

கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரவீந்தீரன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், வஸந்த் ஆகிய ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் ஒவ்வொரு இயக்குநர்களின் கதைகளில் நடித்துள்ளனர்.

நவரசா வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. அதை கெளதம் மேனன் கதையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் பி.சி.ஸ்ரீராம் சோசியல் மீடியாவில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

முதல் லாக்டவுன் நேரத்தில் தொடங்கப்பட ஆந்தாலஜியானது இரண்டாம்கட்ட லாக்டவுனில் வெளியாக தயாராகிவருகிறது.

முந்தைய ஆந்தாலஜி படங்கள் கொடுத்த கசப்பான அனுபவத்தால் ரசிகர்கள் தயக்கம் காட்டினாலும், பெரும் நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும், மணிரத்னம் தலைமையில் இந்தப் படம் அரங்கேறுவதால் கொஞ்சம் நம்பிக்கையுடன் நவரசாவுக்குத் தயாராகலாம்.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வியாழன் 10 ஜுன் 2021