மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

ஜகமே தந்திரம் கதை வெளியிட காரணம்!

ஜகமே தந்திரம் கதை வெளியிட காரணம்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை,ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 18ம் தேதி படம் வெளிவருகிறது.

பொதுவாக ஓடிடியில் வெளியிடப்படும் படங்களுக்கு சமூக வலைதளங்களில் விளம்பரம் மேற்கொள்ளப்படுவதில்லை. அந்தப் படம் எங்கு தயாரிக்கப்பட்டதோ அந்த மொழியில் வரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தி படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது கூட கிடையாது.

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் திரைப்பட பாட்டு புத்தகங்கள் படம் வெளிவருவதற்கு முன்பே கடைகளில் விற்பனைக்கு வந்துவிடும். இவற்றை பெரும்பாலும் திரையரங்குகள் அமைந்திருக்கும் ஏரியாவில் உள்ள பெட்டிகடைகளில் விற்பனைக்கு தொங்கவிட்டிருப்பார்கள்.

படம் பார்க்க வருகின்ற சினிமா ரசிகன் முதலில் அந்தப் படத்தின் பாட்டு புத்தகத்தை வாங்கி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கதை சுருக்கத்தை படித்து விட்டுதான் தியேட்டர் டிக்கட் கவுண்டருக்கே போவான்.

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இது வழக்கமான ஒன்றாக இருந்தது. இது போன்ற பாட்டு புத்தகங்களே தமிழ்சினிமாவின் வரலாற்றை எழுதுவதற்கான மூலப்பொருளாக எழுத்தாளர் அறந்தை நாராயணனுக்கு அமைந்தது.

"தமிழ் சினிமா வரலாறு" என்ற நூல்தான் தமிழ்சினிமா பற்றி தமிழில் வந்த முதல்நூலாக உள்ளது. சினிமா தொழில்-அதில் கையாளப்படும் தொழில்நுட்பங்கள் மாற்றங்களை உள்வாங்கியதால் இன்றைக்கு பாட்டு புத்தகங்கள் பெட்டி கடைகளுக்கு வருவதில்லை.

தமிழ் படங்களின் தமிழ் பாடல்கள் இணையத்திலும், யுடியூப் தளங்களிலும் ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளியிட்டு வருகின்றனர் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். இவற்றை லட்சங்களில், கோடிக்கணக்கில் பார்வையாளர்கள் பார்த்ததாக கூறி தங்களை தாங்களே மகிழ்ச்சிப் படுத்திக்கொள்ளும் வேலையை தமிழ் திரையுலகம் கடந்த பத்தாண்டுகளாக செய்து வருகிறது.

அதனால் ஒரு படத்தின் வெற்றிக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்பது தமிழ் படங்களின் வெற்றி தோல்விகள் நிரூபித்து வருகிறது, 2011ம் வருடம் 3 திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடிய கொலவெறி பாடல் வரிகள் தங்கிலீஷ் எனப்படும் ஆங்கிலம் கலந்த தமிழ்நடையில் உள்ள காரணத்தால் யுடியூபில் பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே 10 லட்சம் முறை பார்க்கப்பட்டது.

2011 நவம்பர் மாதம் ட்விட்டரின் இந்திய ட்ரெண்டிங்கில் முதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்பாடல் இடம் பெற்ற 3 திரைப்படம் திரையரங்கில் வெளியான போது மிக மோசமான தோல்வியை தழுவியது. கொலவெறி பாடலை பார்த்த10 மில்லியன் பார்வையாளர்களில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் கூட தியேட்டர்களில் படம் பார்க்கவில்லை.

இவற்றையெல்லாம் அனுபவ ரீதியாக உணர்ந்து திரைப்படத்தின் கதை முன்னோட்டத்தை படம் பார்க்க வரும் ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிபெற்ற தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் உண்டு. கலைப்புலி தாணு தயாரித்த அசுரன்,கர்ணன் இரு படங்களுக்கும் மேற்கண்ட பார்முலாவை பயன்படுத்தி வெற்றி கண்டார்.

தற்போது ஓடிடி நிறுவனங்கள் இயல்பாகவே கதை சுருக்கத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஜகமே தந்திரம் படத்தின் கதையை வெளியிட்டுள்ளார்கள்.

மதுரையை சேர்ந்த எந்தக் கவலையும் இல்லாத ரௌடி சுருளி, லண்டன் நிழலுலகில் ஆயுதக் கடத்தல், தங்க வியாபாரம் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ், மற்றும் அவனது கூட்டத்தில் ஊடுருவ அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள லண்டனில் அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் தாதா பீட்டர் என்பவனால் சுருளிவேலைக்கு அமர்த்தப்படுகிறான்.

லண்டன் செல்லும் சுருளி மதுரை ஸ்டைலில் லண்டன் அண்டர்கிரவுண்ட் தாதாக்களை எப்படி டீல் செய்கிறான் என்பதை காமெடியும் ஆக்க்ஷனும் கலந்து உள்ள படம்தான் ஜகமே தந்திரம் என்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு.

-இராமானுஜம்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

புதன் 9 ஜுன் 2021