மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

அனிமேஷனிலிருந்து ரியல் சினிமாவான படங்கள் !

அனிமேஷனிலிருந்து ரியல் சினிமாவான படங்கள் !

உலகமெங்கும் நிறைந்திருக்கும் சினிமா ரசிகர்களைக் கவர்ந்திழுக்க புதிது புதிதாக எதையாவது முயற்சி செய்துகொண்டே இருக்கும் ஹாலிவுட் சினிமா. ஒரு படம் ஹிட்டானால், அதன் இரண்டாம், மூன்றாம் பாகங்களை எடுப்பது, நூறுகோடி, ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என பட்ஜெட்டை எகிறவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது என பல விஷயங்களை செய்து வருகிறது. அப்படி, அனிமேஷன் திரைப்படங்களாக வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களை லைவ் ஆக்‌ஷனாகவும் எடுத்து அசத்தி வருகிறது. அதாவது, டிஸ்னி, பிக்ஸார் மாதிரியான ஸ்டுடியோஸ் தயாரித்த க்ளாசிக்கான அனிமேஷன் படங்களை தூசிதட்டி எடுத்து நாஸ்டாலஜிக்கான விஷயங்களுடன் லைவ் ஆக்‌ஷன் படங்களாக்கி கல்லா கட்டிவருகிறது. அப்படி, அனிமேஷனிலிருந்து லைவ் ஆக்‌ஷனுக்கு மாறிய படங்கள் என்னென்ன...? சில சுவாரஸ்ய தகவல்கள்!

பாப்பாய்

எலிஸ் சேகார் உருவாக்கிய காமிக் கதாபாத்திரம்தான் பாப்பாய். 1929ல் King Features எனும் நிறுவனம் வெளியிட்ட காமிக் கதையில் தான் முதன் முதலாக `பாப்பாய்' கதாபாத்திரம் வந்தது. அதன் மூலமாக பிரபலமான கதாபாத்திரமாக மாறி, பிறகு கார்ட்டூனாக மாறியது. கார்ட்டூனிலும் அசத்திய பாப்பாயை அப்படியே சினிமாவாக உருவாகி 1980களில் வெளியானது. இதில், பாப்பாய் ரோலில் ஹாலிவுட்டின் காமெடி மன்னன் ராபின் வில்லியம்ஸ் நடித்திருந்தார். படமும் பெரிய ஹிட்.

ஸ்கூப்பி டூ

தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உருவான சீரிஸ் தான் `Scooby-Doo, Where Are You!'. காமெடியும் மிஸ்ட்ரியும் கலந்த இந்த அனிமேஷன் சீரிஸின் ரெண்டு சீசனும் மிகப்பெரிய ஹிட். அதன்பிறகு, 2002ல் இந்தப் படத்தின் லைவ் ஆக்ஷன் மூவி `Scooby-Doo' எனும் பெயரில் வெளியானது. நெகட்டிவ் ரிவ்யூஸ் வந்தாலும் படம் பெரிய ஹிட் என்பதால், இரண்டாவது பார்ட் `Scooby-Doo 2: Monsters Unleashed' எனும் பெயரில் 2004ல் வெளியானது.

பென் 10

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அனிமேஷன் சீரிஸ் கார்டூன் நெட்வொர்க்கில் வெளிவந்த Ben 10. ஒரு சின்ன பையன் கையில் கிடைக்கும் கடிகாரம் மூலமாக, விதவிதமான ஏலியனா மாறமுடியும் சக்தி கிடைக்கும். அந்த கடிகாரத்தை அடைய நினைக்கும் வில்கேக்ஸ்தான் வில்லன். சைன்ஸ் ஃபிக்ஷன் - காமெடி என கலந்துகட்டி அனிமேஷனாக செம ரீச். பின்னர், 2007ல் லைவ் ஆக்ஷன் வெர்ஷனான பென் 10 - Race Against Time எனும் பெயரில் படம் வெளியானது. அதன் அடுத்த பாகமான Ben 10: Alien Swarm 2009ல் வெளியானது.

அலைஸ் இன் வொண்டர்லேண்ட்

Lewis Carroll எழுதி 1865ல் வெளியான ஃபேன்டஸி நாவல் Alice in the Wonderland. இதை 1951ல் அதே பெயரில் அனிமேஷன் படமாக உருவாக்கியது டிஸ்னி. படம் பெரிய தோல்வியை சந்தித்தது. விட்டதைப் பிடிக்காமல் விடக்கூடாதென, 2010ஆம் ஆண்டு லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாக்கி ரிலீஸ் செய்தது டிஸ்னி. இந்த முறை, படம் பெரிய ஹிட். அதே கையோடு, நாவலின் இரண்டாம் பாகமான Alice Through the Looking Glass கதையையும் லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கி 2016ல் ரிலீஸ் செய்தார்கள். இரண்டு பாகமுமே ஹிட்டோ ஹிட்.

ஸ்லீப்பிங் பியூட்டி

ஃப்ரென்ச் எழுத்தாளர் Charles எழுதிய, The Sleeping Beauty in the Woods எனும் கதையை மையமாகக் கொண்டு உருவான படம் Sleeping Beauty. நூறு வருஷம் தூங்கிவிடுமாறு சபிக்கப்பட்டு தூக்கத்தில் இருக்கும் இளவரசியை எழுப்ப, ஒரு இளவரசன் வரும் கதை. பொதுவா Fairy Tales களை படமாக்குவதில் பெரும் ஆர்வம் காட்டும் டிஸ்னி, இந்தக் கதையை அனிமேஷன் படமாக்கினார்கள். ஆனா, டிஸ்னிக்கு இந்தப் படமும் கைகொடுக்கவில்லை. இருந்தாலும் பரவாயில்லை என, திரைப்படமாக்கி கொஞ்சம் கிளைக் கதைகளையும் சேர்த்து 2014ல் வெளியான படம் தான் Maleficent. ஏஞ்சலினா ஜோலி லீட் ரோலில் நடித்திருப்பார். படமும் பெரிய ஹிட். தொடர்ந்து, இரண்டாம் பாகமான Maleficent: Mistress of Evil படமானது 2019ல் வெளியானது.

சின்ட்ரெல்லா

சின்ட்ரெல்லா கதையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நாடோடிக் கதையான இதற்கு, உலகமெங்கும் பல வெர்ஷன் இருக்கிறது. அம்மா இறந்த பிறகு சித்தியின் கொடுமையை அனுபவிக்கும் ஒரு பெண், இளவரசனை எப்படி கல்யாணம் செய்துகொள்கிறார் என்பதே கதை. அதற்குள் நடக்கும் மாயாஜாலங்களே படத்தின் ஹைலைட். 1950ல் டிஸ்னி நிறுவனம் `சின்ட்ரெல்லா'வை அனிமேஷன் படமாக்கியது. டிஸ்னியின் வரலாற்றில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன்பிறகு, 65 வருஷத்துக்குப் பிறகு அதே, `சின்ட்ரெல்லா'வை உயிருடன் உலாவ விட நினைத்தார்கள். அதன்படி, 2015ல் அதே பெயரில் படம் வெளியானது. சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

ஜங்கிள் புக்

Rudyard Kipling எனும் எழுத்தாளர் இந்தியாவில் தங்கி 1894ல் எழுதிய புத்தகள் ஜங்கிள் புக். அந்தப் புத்தகத்தை மையமாக கொண்டு, 1967ல் டிஸ்னி தயாரிப்பில் வெளியான படம் ஜங்கிள் புக். இதில் வரும் `மெளக்லி' தான் இந்தக் கதையின் மைய கதாபாத்திரம். இந்த கேரக்டரை மையமாக கொண்டு இரண்டு ஹாலிவுட் படங்கள் லைவ் ஆக்‌ஷனாக வெளியானது. ஒன்று, டிஸ்னி தயாரித்து 2016ல் வெளியான தி ஜங்கிள் புக். மற்றொன்று, வார்னர் பிரதர்ஸ் எடுத்து 2018ல் வெளியான Mowgli: Legend of the Jungle. இவ்விரு படங்களுமே பெரிய ஹிட்.

பியூட்டி & பீஸ்ட்

Jeanne-Marie எழுதி 1740ல் வெளிவந்த கதையை, அதே பெயரில் 1991ல் டிஸ்னி நிறுவனம் அனிமேஷன் படமாக எடுத்தது. அதுதான், Beauty and Beast. இதுவும் பல முறை அடாப்ட் செய்யப்பட்ட கதைதான். டிஸ்னியே சமீபத்தில் இதை லைவ் ஆக்ஷன் படமாவும் முயற்சி செய்து, 2017ல் வெளியிட்டது. இதில் லீட் ரோலில் நடித்தது, நம்ம ஹாரிபாட்டர் ஹெர்மாயினியான எம்மா வாட்சன் தான். படமும் ஹிமாலய ஹிட்.

டாம் & ஜெர்ரி, Pokémon, டோரா படமெல்லாம் மிஸ்ஸாகுதே என யோசிக்கலாம்.. இந்த லிஸ்ட் இன்னும் முடியவில்லை. அனிமேஷன்லிருந்து லைவ் ஆக்‌ஷனான படங்களின் பட்டியலில் சுவாரஸ்யமான இன்னும் சில படங்கள் இருக்கிறது. மீதிப் படங்களை அடுத்தக் கட்டுரையில் வாசிக்கலாம்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 6 ஜுன் 2021