மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

தி பேமிலி மேன் 2: எதிர்ப்பும் நடிகையின் விளக்கமும்!

தி பேமிலி மேன் 2: எதிர்ப்பும் நடிகையின் விளக்கமும்!

ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில் இந்தியில் கடந்த 2019ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியான வெப் சீரியஸ் தி பேமிலி மேன்.

மும்பைக் குண்டு வெடிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வெப் சீரியஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இதன் இரண்டாவது பாகம் நேற்று  முன்தினம் வெளியானது இந்த வெப்சீரிஸில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் சாதாரண குடும்பத் தலைவராக இருந்து கொண்டே இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதிகளை எப்படிச் சமாளிக்கிறார் என்பதை மையமாக வைத்துத்  தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா, ராஜி எனும் தற்கொலைப் படையைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். இத்தொடருக்கான டிரைலர் வெளியானபோது தமிழர்களையும் எல்டிடிஇ குழுவையும் தவறாகக் காட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த தொடரை ஒளிபரப்புவதை அமேசான் பிரைம் நிறுவனம் கைவிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். அப்போதெல்லாம் இத்தொடரில் நடித்தது பற்றி எந்தவித கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 தொடரில் தான் நடித்ததற்கான காரணம் குறித்து தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் .

அவர் கூறுகையில்,  “தி பேமிலிமேன்-2 தொடரில் நடித்ததற்காக எனக்கு ஏராளமான பாராட்டுக்கள் வருகின்றன. எனது நடிப்பு குறித்து வெளியாகியுள்ள மதிப்புரைகளும் கருத்துக்களும் எனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது.  ராஜி எப்போதும் சிறப்பானவளாக இருப்பாள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், ”இந்த தொடரில் நடிக்க என்னை அணுகியபோது அந்த கேரக்டரை சித்தரிக்க அதை உணரக்கூடிய திறன் வேண்டும் என உணர்ந்தேன்.  அதோடு, ஈழப்போரில் பெண்களின் கதைகளை உள்ளடக்கிய ஆவணப் படங்களை எனக்கு கொடுத்தார்கள். அந்த ஆவணப் படங்களை நான் பார்த்தபோது ஈழத்தமிழர்கள் நீண்டகாலத்திற்கு எதிர்கொண்ட கஷ்டங்கள் மற்றும் சொல்ல முடியாத துயரங்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

இந்த ஆவணப் படங்கள் சில ஆயிரம் பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருந்தன என்பதை நான் கவனித்தேன். அதுதான் ஈழத்தின் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தபோதும் உலகம் எப்படி விலகிப்பார்த்தது என்பது எனக்குத் தெரியவந்தது.

மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். இந்த உள்நாட்டு சண்டை காரணமாக எண்ணற்ற மக்கள் தொலைதூர நாடுகளில் தங்கள் மனதிலும், இதயத்திலும், காயங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ராஜியின் கதை கற்பனையானது என்றாலும், போரினால் இறந்தவர்களுக்கும், போரின் வேதனையான நினைவுகளுடன் வாழ்பவர்களுக்கும் சமர்ப்பணம். ராஜியின் சித்தரிப்பு சமநிலையானது. நுணுக்கமானது, மற்றும் உணர்திறன் கொண்டது.

முன்பைவிட எங்களுக்கு வெறுக்கத்தக்க அடக்குமுறைக்கு, பேராசைக்கு எதிராக மனிதர்களாக ஒன்றிணைவதற்கு ஒரு தெளிவான, மிகவும் அவசியமான நினைவூட்டலாக இருக்க விரும்புகிறேன். நாம் அவ்வாறு செய்யத் தவறினால் எண்ணற்றவர்களின் அடையாளம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு பட தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க துணை செயலாளருமான சுரேஷ் காமாட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு எதிராக தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

அதில், "எம் தமிழர் வரலாற்றைத் திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றைப் பதிவு செய்யத் தமிழ்ப் படைப்பாளிகளும்... உலகத் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும், நம் வரலாற்றை நாமே எழுதுவோம்" என தெரிவித்துள்ளார்.

சீமான் எச்சரிக்கை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழர்களின் தாயகத்தை மொத்தமாய் ஆக்கிரமித்து, ஆதிக்கம் செய்து, அழித்தொழித்த அரசப்பயங்கரவாதிகளான சிங்கள ஆட்சியாளர்களின் குரல் போல ஒலித்து, தமிழர்களை மிகக்கீழ்த்தரமாகக் காட்டி, போர்வெறிக் கொண்ட பயங்கரவாதிகளாவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்க முற்படும் வகையில் இணையத்தொடரை உருவாக்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும், அனைத்துலக நாடுகளும் கூட்டுச்சேர்ந்து ஒருமித்து ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலையில் 2 லட்சம் தமிழர்களைச் சாகக்கொடுத்துவிட்டு அதற்கான எந்த நீதியையும் பெற முடியா கையறு நிலையில், உலக அரங்கில் தமிழர்கள் கூக்குரலிட்டுப் போராடிக்கொண்டிருக்கையில் தமிழர்கள் பக்கமிருக்கும் நியாயத்தையோ, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியையோ, அங்கு நடந்த உண்மைச் செய்திகளையோ, ஈழ விடுதலைப்போராட்டத்தின் பெரும் வரலாற்றையோ பதிவு செய்ய வாய்ப்பிருந்தும், அதனைச் செய்யாது தமிழர்களுக்கெதிராக நச்சுக்கருத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்துருவாக்கங்களைக் கொண்டுள்ள இதுபோன்ற இணையத்தொடர்கள் முழுக்க முழுக்கத் தடைசெய்யப்பட வேண்டும். இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு ஆளாகிப் பெரும் காயம்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கும், 12 கோடி தமிழ்த்தேசிய இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப்பார்ப்பதாகவும், தரம்தாழ்த்துவதாகவுமே இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஈழப்போர் முடிவுற்று, 11 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலைக்கு எவ்விதப் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையோ, பொது வாக்கெடுப்போ கிடைக்கப்பெறாத தற்காலச்சூழலில் அறப்போராட்டங்களின் வாயிலாகவும், சட்டப்போராட்டங்களின் வாயிலாகவும், ஐ.நா.வில் நடக்கும் அமர்வுகளின் வாயிலாகவும், உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்களின் அணிச்சேர்க்கை மூலமாகவும் தமிழர்கள் எங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடும் அநீதியைப் பன்னாட்டுச் சமூகத்திற்கு விளக்கி, அதற்கான நீதிகோரி நிற்கிறோம்.

முதல் பாகத்தில் இசுலாமியர்களையும், இரண்டாவது பாகத்தில் இப்போது தமிழர்களையும், மூன்றாவது பாகத்தில் வங்காளிகளையும் எனத் தொடர்ச்சியாக தேசிய இனங்கள் மீதும், இம்மண்ணின் மக்கள் மீதும் உண்மைக்கு மாறான திட்டமிட்ட அவதூறுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, பச்சைப்பொய்களைக் காட்சிகளாக உருவாக்கி, வரலாற்றுத் திரிபுகளைத் தொடர்ச்சியாகச் செய்து வரும், ‘தி பேமிலி மேன்’ இணையத்தொடரை முற்றாகத் தடைசெய்யவும், நிறுத்தவும் செய்ய வேண்டியது இன்றியமையாத தேவையாகும்.

இத்தகைய இணையத்தொடருக்குத் தமிழக அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, அதற்கு எதிர்ப்பு நிலையினை எடுத்து, தடைசெய்யக் கோரியும்கூட அதனை ஏற்காத மத்தியில் ஆளும் பாஜக அரசின் நயவஞ்சகச்செயல் அப்பட்டமான தமிழர் விரோதப்போக்காகும்.

இத்தொடரைத் தடை செய்யாவிட்டால், சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும்  களமிறங்கித் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் இத்தொடர் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

ஞாயிறு 6 ஜுன் 2021