மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

ஊரடங்கை மீறி சூட்டிங்: அரசு தடுக்குமா?

ஊரடங்கை மீறி சூட்டிங்: அரசு தடுக்குமா?

கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஊரடங்கை அமுல்படுத்தியது. அதன் காரணமாக தமிழகம் முழுவதுமே தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. திரையுலகத்தில் சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் எப்போது இந்த நிலைமை சரியாகும் என்பது குறித்து பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி ஒரு ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்த இரண்டாவது லாக் டவுன் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. நான் அரசிடம் விசாரித்த வரையிலும் மூன்றுவித வழிமுறைகளை அரசு கைவசம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதில் முதல் வழிமுறையில், சினிமா துறை இல்லை. இரண்டாவது வழிமுறையில் சின்னத்திரை மட்டுமே உள்ளது. சின்னத்திரை படப்பிடிப்பிகளுக்கும், டப்பிங், எடிட்டிங் பணிகளுக்கும் இப்போது அனுமதி கிடைக்கும்.

மூன்றாவது வழிமுறையில்தான் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு, சினிமா படப்பிடிப்புகள் ஆரம்பமாகும். சினிமா டப்பிங், எடிட்டிங் பணிகள் துவக்கப்படும். இதுதான் அரசுத் தரப்பில் இப்போது சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் சினிமா துறை மீண்டும் பழையை நிலைமைக்கு வருவதற்கு இன்னும் கூடுதல் நாட்களாகும்.

இப்போதுதான் கொரோனா தாக்குதலின் தீவிரம் கொஞ்சம், கொஞ்சமாக குறையத் துவங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அரசுக்கு உதவி செய்யத்தான் வேண்டும். அதற்காகத்தான் அனைத்துவித படப்பிடிப்புகளையும் நாம் நிறுத்தி வைத்துள்ளோம்.

ஆனாலும் ஒரு சில பெரிய டிவி சேனல்கள் தங்களுக்கு புட்டேஜ் இல்லை என்கிற காரணத்தினால் “நாங்க அவங்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டோம். இவங்ககிட்ட பெர்மிஷன் வாங்கிட்டோம்…” என்று சொல்லி ஆங்காங்கே படப்பிடிப்புகளைத் துவக்கலாம்.

அது மாதிரியான முறைப்படி அனுமதி பெறாத படப்பிடிப்புகளுக்கு நமது பெப்சி அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம். அப்படி மீறிச் சென்று அதன் விளைவாக ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு பெப்சி அமைப்பு எந்த உதவியையும் செய்யாது. ஆகவே தொழிலாளர்கள் இதில் கவனத்துடன் இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இப்படியொரு ஆடியோ பதிவை செல்வமணி வெளியிட வேண்டிய தேவை ஏன் வந்தது என்று பெப்சி மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் சங்க பிரமுகர்களிடம் விசாரித்தபோது

ஊரடங்கு மே 10ம் தேதி நடைமுறைக்கு வந்தபின்னரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆளுங்கட்சிக்கு சாதகமான சேனல்கள் சீரியல் தொடருக்கான சூட்டிங்கை நடத்தி வந்தனர்.

இதனால் 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் பூந்தமல்லி ஈவிபி படப்பிடிப்பு தளம் சீல் வைக்கப்பட்டது. இந்த செய்திகளை அறிந்த பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, அதுவரை சீரியல் சூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி கேட்டு வந்தவர், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு முடிவுக்கு வரும்வரை பெப்சி தொழிலாளர்கள் சின்னதிரை, பெரிய திரைபடப்பிடிப்புகளில் பங்கேற்கமாட்டார்கள் என அறிவித்தார்.

இதன் காரணமாக தமிழ் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்து வந்தது "ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது" என்பார்கள். பெப்சி தலைவர் பேச்சுக்கு மதிப்பளித்து சில நாட்கள் சூட்டிங் நடத்தாமல் இருந்தனர். ஈவிபி படப்பிடிப்பு தளத்தை சீல் வைத்த பின்னரும் எந்த பயமும் இன்றி நடிகர்கள், ஊழியர்கள் உடல்நலன் உயிர் மீதான அக்கறை இன்றி தொலைக்காட்சி அலுவலகங்களில் அடக்கமாக சூட்டிங்கை நடத்த தொடங்கிவிட்டனர்.

ஆளுங்கட்சி சேனலை பார்த்து அதன் ஆதரவு சேனல் இவர்களை பார்த்து மற்ற சேனல்கள் படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அரசின் அறிவிப்புகளை மதிக்காமல் அத்துமீறி செயல்படுபவர்களை பற்றிய செய்திகளை வெளியிட வேண்டிய சேனல்களே அத்துமீறி செயல்பட்டு வருவதை அரசிடம் போட்டுக் கொடுக்க விரும்பாத பெப்சி தலைவர் செல்வமணி எதிர்த்து கேள்வி கேட்க முடியாத ஆளுங்கட்சி சேனல்களுக்கு எதிராக தன் மன குமுறலை கொட்டவே அறிக்கை வெளியிட்டார் என்கின்றனர் பெப்சி வட்டாரத்தில்.

ஒரு சேனலைப் பார்த்து இன்னொரு சேனல் என தற்போது 15 தொலைக்காட்சி தொடர்களுக்கான சூட்டிங் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் சின்னத்திரை கலைஞர்கள் வட்டாரத்தில். பெப்சி என்கிற பலம் மிக்க அமைப்பு அத்துமீறி நடத்தப்படும் படப்பிடிப்பை நிறுத்தலாமே என பெப்சி நிர்வாகிகள் மட்டத்தில் கேட்ட போது,

”சினிமாவில் செயல்படகூடிய சங்கங்களில் மிகப்பலவீனமான அமைப்பு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்கங்களுக்கு அடுத்தபடியாக பெப்சி அமைப்பை கூறலாம். தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சங்கங்கள் இங்கு அதிகாரம் மிக்கதாக, அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டம் இங்கு உள்ளது.

தொடர்ந்து அன்றாட வாழ்க்கை பிரச்சினையை சாமாளிக்க முடியாமல் முடங்கிகொண்டிருக்கும் கிடைத்த வரை லாபம் என்கிற அடிப்படையில் பெப்சி கூறிய பின்னரும் சூட்டிங் போவதற்கு காரணம், அவர்களின் வறுமை. வசதியுள்ள நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை, வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்கிற பயத்தில் சூட்டிங் போகின்றனர்.

உடல்நிலை, உயிர் பயம் உள்ளவர்கள் சீரியலில் இருந்து விலக தொடங்கியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது சுயவிருப்பத்தின்பேரில் படப்பிடிப்பில் பங்கேற்பதை பெப்சி தடுக்காது. ஆனால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சூட்டிங் நடத்துகிறவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டிவரும் தொழிலாளர்களுக்காக பெப்சி எந்த முயற்சியும் செய்து நஷ்டஈடு அல்லது உதவிகளை பெற்றுத் தராது” என்கின்றனர் பெப்சி அமைப்பின் நிர்வாகிகள் மட்டத்தில்

முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தபின்பு தான் தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளது. இந்த சூழலில் பொறுமை காக்க முடியாமல் மறுபடியும் சூட்டிங் போவது என்பது கடுமையான இழப்புக்களை நமக்கு ஏற்படுத்தும் என்று சொல்லியதை புரிந்துகொண்டு படப்பிடிப்புக்கு வர முடியாது என்றவர்களை சீரியலில் இருந்து நீக்குகிற வேலையும் நடந்துவருகிறது.

இதில் பெப்சி அமைப்பு உறுதியான நிலை எடுத்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் முறையிட்டு சீரியல் படப்பிடிப்புகளை தடை செய்ய வேண்டும் என்கின்ற குரல்கள் சின்னதிரை நடிகர் சங்கம், பெப்சி அலுவலக வட்டாரங்களில் அழுத்தமாக கேட்க தொடங்கியுள்ளது

இந்த அசாதரண சூழல் பற்றி சின்ன திரை நடிகர் சங்க தலைவர் ஊடகங்களிடம் கூறுகிற போது

“ஆந்திர மாநிலத்தில் சூட்டிங்கிற்கு அனுமதி தருவதாகவும் இங்கு உள்ள யூனிட்கள் அங்கே வேலைக்கு ஆட்களை எடுப்பதாக கேள்விப்பட்டோம். சங்க உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று வலியுறுத்த மட்டுமே முடியும். உத்தரவு போட முடியாது. பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தபட்டவங்கதான் பொறுப்பாளியாக முடியும் என கூறிவிட்டேன் .மற்றபடி தமிழ்நாடு அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக சின்னத்திரை நடிகர்கள் சங்கம் செயல்படாது”என கூறியுள்ளார்.

நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களை எந்த பாதுகாப்பும் இன்றி படப்பிடிப்பில் நடிக்க வற்புறுத்தி அழைக்கும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் என்ன சாதிக்கபோகிறார்கள் என்பது புரியவில்லை என்று புலம்பும் சின்னதிரை நடிகர்கள் சிலர் கடுமையான சோதனை நடத்தி படப்பிடிப்புகளை நிறுத்திவைப்பது அவசியமானது என்கின்றனர்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 4 ஜுன் 2021