மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

இயக்குனர் ரங்கராஜன் மறைவு: கமல் புகழஞ்சலி!

இயக்குனர் ரங்கராஜன் மறைவு:  கமல் புகழஞ்சலி!

தமிழ் சினிமாவின் பொற்காலமாக கருதப்படும் காலங்களில் ஒன்றான 1980களில் கமல்ஹாசன் நடித்த படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்(90). அவர் இன்று காலை 8.45 மணிக்கு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

பழம்பெரும் இயக்குனர் ஏ. பீம்சிங்கிடம் 30 படங்கள் வரை உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதனை தொடர்ந்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் பணிபுரிந்தார். களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரங்கராஜன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், கரையெல்லாம் செண்பக பூ, ராணி தேனி, மகராசன் உள்ளிட்ட ஏழு படங்களை இயக்கி உள்ளார்.

கமல்ஹாசன் நடித்த படங்களில் வசூல் அடிப்படையிலும், படைப்பு ரீதியாகவும் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனர்களில் ரங்கராஜன் தவிர்க்க முடியாதவர். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கமல்ஹாசன், ”நான் சினிமாவில் நுழைந்த காலம் தொட்டு இறக்கும் தறுவாய்வரை என் மீது மாறாத பிரியம் கொண்டவர். ஜி.என்.ரங்கராஜன் கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கி கொண்டவர்.

இன்றும் விரும்பிப் பார்க்கப்படும் பல தமிழ் திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குத் தந்தார். அவரது நீட்சியாக மகன் ஜி.என்.ஆர்.குமரவேலனும் சினிமாவில் தொடர்கிறார். என்னை வைத்துப் பல வெற்றிப்படங்களைத் தந்தவர் என் மீது கொண்ட மாறாத அன்பால் தான் கட்டிய வீட்டிற்கு" கமல் இல்லம்" என்று பெயர் வைத்தார்.

இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக் குறைய 30 வயதாகி இருக்கக்கூடும். ஜி.என்.ஆர் தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவில் மட்டுமல்ல மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எங்கும் என் தரப்பாகவே இருந்தவர், சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்க வேண்டும், கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார் எனக் கேள்வியுற்றேன்.

தான் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர். நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும், தம்பி இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனுக்கும் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

-இராமானுஜம்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

வியாழன் 3 ஜுன் 2021