மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சியில் குறும்படம் எடுத்து அதனை யுடியூப், முகநூல் தளங்களின் மூலம் மக்களிடம் சென்றடைவது பாய்ச்சல் வேகத்தில் நடந்து விடுகிறது.

இதனால் நன்மைகளும், தீமைகளும் சம அளவில் இருந்து வருகிறது. அதேபோன்று திரைப்படம் பார்ப்பது திரையரங்குகளில் மட்டுமே சாத்தியம் என்பதை தொலைக்காட்சிகளும், குறுந்தகடுகளும் மாற்றியது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சினிமாவிற்குள் நுழைந்தபோது தொலைக்காட்சி, குறுந்தகடு, முகநூல், யுடியூப், தியேட்டர் இவைகளை பின்னுக்கு தள்ளி வீட்டிற்குள் இருந்து கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் குறைவான செலவில் புதிய சினிமா படங்கள் பார்க்கும் வாய்ப்பு ஓடிடி தளங்கள் மூலம் சாத்தியம் என்பதை ஓடிடி தளங்கள் உறுதிப்படுத்தியபோது தமிழ்சினிமாவின் முகம் மாறியது.

தொழில்நுட்ப ரீதியாக மக்களுக்கு மலிவு விலையில் திரைப்படங்கள் கிடைக்கிறது என்று மக்கள் மகிழ்ந்தனர். ஆனால் அதுவே மக்களின் மனங்களை சங்கடப்படுத்தும் வகைகளில் ஈடுபடுகிறபோது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறது.

தணிக்கை சான்றிதழ் ஓடிடியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு, தொடர்களுக்கு தேவையில்லை என்கிறபோது பண்பாட்டையும், மொழி, கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் ஓடிடியில் வெளியான குறுந்தொடர்களும், சில படங்களும் இருந்ததால் தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்கும், 'தி ஃபேமிலி மேன் 2’ என்ற இணையத் தொடரின் முன்னோட்டம் மே 19 ஆம் தேதியன்று வெளியானது.

அதில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ,நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதினர்.

இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி நாளை அத்தொடர் வெளியாகவுள்ளது.

இதனால் தமிழ் உணர்வாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எங்கள் உணர்ச்சிகளை அவமதித்தவர்கள் எல்லோரும் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர்கள் தொடரில் அப்படி எதுவும் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என தெரிந்தவுடன் ஓட்டுமொத்த தமிழகமும் அதனை கடுமையாக எதிர்த்தனர். ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா இதுவரை எதுவுமே பேசவில்லை.

இந்தத் தொடரை ஒளிபரப்பவே கூடாது, மீறி ஒளிபரப்பினால் படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தா உள்ளிட்ட அனைவரது அடுத்தடுத்த படங்களையும் புறக்கணிப்போம், இதை ஓர் இயக்கமாக நடத்துவோம் என்று தமிழ் உணர்வாளர்கள் கூற தொடங்கியுள்ளனர். கூறியதோடு இல்லாமல் உங்களால் அவமானப்படுகிறோம் எனும் பொருளில் Shameonyousamantha எனும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி ஏராளமானோர் ட்வீட் செய்து வருகின்றனர்.

தமிழ் நடிகை, தமிழகத்தில் பிறந்தவர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் சமந்தா, ஈழ தமிழர்களின் அடையாளத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடித்திருப்பதற்கு காரணம் அவருடைய மேலாளராக இருக்கும் நடிகர் விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ்தான், இதற்குக் காரணம் என்பதாலும் தமிழ் உணர்வாளர்களின் கோபம் அதிகரித்திருக்கிறது.

இது எதிர்காலத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட படங்கள் மற்றும் நிகழ்வுகளில் கடுமையாக எதிரொலிக்கும் என்று சொல்கிறார்கள்.

-இராமானுஜம்

.

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

வியாழன் 3 ஜுன் 2021