மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 ஜுன் 2021

‘ஜகமே தந்திரம்’... சாதிக்குமா, சரித்திரத்தை மாற்றுமா?

‘ஜகமே தந்திரம்’... சாதிக்குமா, சரித்திரத்தை மாற்றுமா?

தமிழ் சினிமாவில் கதை, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வெளியீடு இவற்றை தீர்மானிக்கும் சக்தியாகப் படத்தின் கதாநாயகனே இருந்து வருகிறார். தயாரிப்பாளர் என்பவர் பணம் முதலீடு செய்யக்கூடிய தரகு முதலாளியாகவே இருந்து வருகிறார்.

அதை முறியடித்து கதாநாயகன் விருப்பத்துக்கு மாறாக வெளியாகும் படம் ‘ஜகமே தந்திரம்’. நடிகர் தனுஷ் திரையுலக வாழ்க்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ‘அசுரன்’ படத்துக்குப் பின் ரசிகர்களாலும், வியாபாரிகளாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம். இணையத்தில் நேரடியாக வெளியிடப்படும், தனுஷ் நடித்த முதல் படம் ‘ஜகமே தந்திரம்’.

நடிகர் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் இயக்குநர்கள் செல்வராகவன், பாலுமகேந்திரா, வெற்றிமாறன் இயக்கிய படங்களுக்கு அடுத்தபடியாக ரசித்து நடித்த படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம்.

தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் படங்கள் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்றது. அதனால் ஜகமே தந்திரம் படத்தைத் திரையரங்கில் வெளியிட நடிகர் தனுஷ் விரும்பினார். அவர் ரசிகர்களும் அதை ஆதரித்து சமூக வலைதளங்களில் தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஒருகட்டத்தில் நடிகர் தனுஷ் படத்தின் தமிழக விநியோக உரிமையை அவரது நேரடி பார்வையில் வியாபாரம் செய்து கொடுக்கவும் முயற்சியை மேற்கொண்டார்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் இதுபோன்ற எந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பு தரவில்லை. காரணம், ஓடிடி வெளியீட்டில் ஒரே தவணையில் படத்துக்கான மொத்த தொகையும் கிடைத்துவிடும். படத்தை வியாபாரம் செய்து அதற்கு கமிஷன், திரையரங்கு ஒப்பந்தம் போன்ற கூடுதல் பளுவைச் சமாளிப்பது இன்றைய சூழ்நிலையில் சரியாக வராது என்பதால் ஓடிடி ரிலீஸ் என்பதில் உறுதியாக இருந்தனர் தயாரிப்பாளர் தரப்பில்.

இதற்கிடையில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டு 10 நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக ஜகமே தந்திரம் சினிமா பார்வையாளன், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிரிபுதிரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதனால் படத்தின் புரமோஷனை தயாரிப்பு மற்றும் படத்தை வாங்கியுள்ள ஓடிடி நிறுவனம் இணைந்து தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஜூன் 18ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டத்தை நேற்று (ஜூன் 1) வெளியிட்டது. ஜகமே தந்திரம் படத்தின் முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வெளியான முன்னோட்டத்தோடு படத்தின் கதைக்களத்தையும் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

இது கோடம்பாக்க சினிமாவில் புதிய அணுகுமுறை. பெரும்பாலும் படம் வெளியாகும் வரை இன்றைய இயக்குநர்கள் படத்தின் கதையைப் பொதுவெளியில் கூறுவது இல்லை. அதற்கு மாறாக ஜகமே தந்திரம் கதை என்ன என்பதை அறிவித்ததற்கு காரணம், படத்தின் மீது பிரமிப்பும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்தவே என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

ஜகமே தந்திரம் படத்தின் கதையாகக் கூறப்பட்டு இருப்பதாவது, மதுரையைச் சேர்ந்த, எந்தக் கவலையும் இல்லாத ரவுடி சுருளி. லண்டன் நிழலுலகில் ஆயுதக் கடத்தல், தங்க வியாபாரம் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ் மற்றும் அவனது கூட்டத்தில் ஊடுருவுகிறார்கள். அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, லண்டனில் அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்திருக்கும் பெரிய தாதா பீட்டர் என்பவனால் சுருளி வேலைக்கு அமர்த்தப்படுகிறான். மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில், அவர்கள் வீடு என்று நினைக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே, ஜகமே தந்திரம் படத்தின் கதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லரைப் பார்த்த ரசிகர்கள், ’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் செம. டிரெய்லர் தீயாக இருக்கிறது. தரமான சம்பவம் செய்திருக்கிறீர்கள் கார்த்திக் சுப்புராஜ். சுருளியை பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறீர்கள். பேட்ட வேலன் பையன் சின்னா இன்னும் சாகல. படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறோம். ஆனால், அதே நேரம் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது அண்ணா. பக்கா தியேட்டர் மெட்டீரியலை போய் ஓடிடிக்குக் கொடுத்துவிட்டீர்களே, அதனால்தான் ஏமாற்றம்.

ஜகமே தந்திரம் ரிலீஸ் தொடர்பாக தனுஷ் அண்ணா கோபமாக இருப்பதில் தவறே இல்லை என்பது டிரெய்லரைப் பார்த்தால் புரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டபோதே அதை கை கழுவிவிட்டார் தனுஷ். ஆனால் தன் மனதை மாற்றிக்கொண்டு டிரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் வெற்றி தோல்வி, கோடம்பாக்க சினிமாவில் பல்வேறு வியாபார மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. அது தயாரிப்பாளருக்கா அல்லது அதிகார சக்தியாக விளங்கும் கதாநாயகனுக்கா... தமிழ் சினிமா முடிவுக்காகக் காத்திருக்கிறது.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

4 நிமிட வாசிப்பு

தி வாரியர் டப்பிங் உரிமை எத்தனை கோடிக்கு விற்பனை?

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

3 நிமிட வாசிப்பு

கொரோனா வார்டையும் கைப்பத்துவோமா...: அப்டேட் குமாரு

புதன் 2 ஜுன் 2021