மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

10,86,000 அபராதம்: பிரெஞ்சு ஓப்பனில் இருந்து விலகும் வீராங்கனை!

10,86,000 அபராதம்: பிரெஞ்சு ஓப்பனில் இருந்து விலகும் வீராங்கனை!

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகாவுக்கு 10,86,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரெஞ்சு ஓப்பன் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் விளையாடிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

இதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்திக்க அவர் மறுத்து விட்டார். இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 10, 86,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று அவர் நடந்து கொண்டால் அவர் மீது கூடுதல் தடை விதிக்க வேண்டி வரும் என நடுவர் கூறியுள்ளார்.

ஒசாகா கடந்த வாரம், “பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டேன். மனநலம் தொடர்ந்து நன்றாக இருப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறினார்.

எனினும், பிரெஞ்சு ஓப்பன் போட்டி நிர்வாகிகள் சார்பில் வெளியான அறிக்கையில், ‘கிராண்ட்ஸ்லாம் பட்டப் போட்டிகளுக்கான நடத்தை விதிகளின் கீழ், போட்டியில் வெற்றி, தோல்வி என முடிவு எதுவாக இருப்பினும், டென்னிஸ் விளையாட்டின் நலன், ரசிகர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொள்வோர் நலனுக்காக ஊடகக்காரர்களிடம் பேச வேண்டியது வீரர், வீராங்கனைகளின் கடமை’ எனத் தெரிவித்திருந்தது.

அத்துடன் பிரெஞ்சு ஓப்பன் சமூக வலைதளத்தில் ஒசாகாவின் தவற்றைச் சுட்டிக்காட்டும் விதத்தில் ரபெல் நடால், நிஷிகோரி, சபலென்கா, கோகோ காப் ஆகியோர் மீடியாவைச் சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்கள் தங்கள் பணியைப் புரிந்து செயல்படுகிறார்கள் என்று பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு முன்னாள் வீராங்கனைகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

23 வயதான ஒசாகா 2018ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனையும், 2019ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பனையும் கைப்பற்றி அசத்தினார். அதைத் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்த முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். தற்போது அவர் டென்னிஸ் தர வரிசையில் 10ஆவது இடம் வகிக்கிறார்.

பெண்களில் நிறைய சம்பாதிக்கும் வீராங்கனையாக கடந்த நான்கு ஆண்டுகளாக செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் இருந்தார். அவரது ஆதிக்கத்தை இந்த இளம் புயல் முடிவு கட்டினார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான 38 வயதான செரீனா வில்லியம்ஸ் கடந்த சீசனில் சம்பாதித்த தொகை ரூ.273 கோடியாகும். செரீனாவைப் பின்னுக்கு தள்ளி, ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தவர் நவோமி ஒசாகா. இதனால் இந்த அபராதத் தொகை பெரிய விஷயமில்லை என்கிறார்கள் உலக டென்னிஸ் ரசிகர்கள்.

இந்த நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணித்த விவகாரம் தொடர்பாக நவோமி ஒசாகா, பிரெஞ்சு ஓப்பன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு நான் கவனச்சிதறலாக இருந்து விடக் கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உண்மை என்னவென்றால், 2018ஆம் ஆண்டு யுஎஸ் ஓப்பன் போட்டியில் இருந்து நான் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், சமாளிக்க எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னை அறிந்த எல்லோருக்கும் நான் திடமான சிந்தனை உடையவர் என்பது தெரியும்” என்று நவோமி ஒசாகா பதிவிட்டுள்ளார்.

-ராஜ்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 1 ஜுன் 2021