மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

இயக்குநர்களை இப்படித்தான் தேர்வு செய்கிறார் தனுஷ்

இயக்குநர்களை இப்படித்தான் தேர்வு செய்கிறார் தனுஷ்

ரஜினி - கமல், விஜய் - அஜித், விக்ரம் - சூர்யா என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் போட்டி நடிகர்களுடன் ஒப்பீடு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். அந்த வரிசையில் ஒரு காலக்கட்டத்தில் தனுஷ் - சிம்பு இருவரையும் ஒப்பீடு செய்தார்கள் ரசிகர்கள். இருவருமே திரைத்துறையில் வளர்ந்து வந்துகொண்டிருந்த நேரம்.

தனுஷை விட சிம்பு திரையுலகில் கொடிக்கட்டிப் பறந்தார். பல்வேறு காரணங்களால் இந்த ரேஸில் தனுஷுக்கு இணையாக சிம்புவால் ஓட முடியவில்லை. மீண்டும் களமாட தொடங்கியிருக்கிறார் சிம்பு. அது ஒருபக்கம் இருக்கட்டும். இப்போது, எந்த நடிகரோடும் ஒப்பீடு இன்றி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார் தனுஷ். தனுஷின் படத் தேர்வும், இயக்குநர்கள் தேர்வும் ஆச்சரியமான ஒன்று. இது குறித்த சுவாரஸ்யமானத் தகவல்களைப் பார்க்கலாம்.

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் தனுஷ். சினிமாவின் பல்ஸ் பிடிப்பதற்குள் பத்து படங்களுக்கு மேல் நடித்தும் விட்டார். கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த தனுஷுக்கு, ரசிகர்கள் மத்தியில் முதல் கவன ஈர்ப்பு துவங்கியது பொல்லாதவன் படத்தின் மூலம்தான். தனுஷின் சினிமா கிராஃப்பை மாற்றியதும் அந்தப் படம்தான். அதற்கு முன்பாக, தனுஷை நடிகராக ரசிகன் மனதில் நிறுத்தியதில் பெரும் பங்கு சகோதரர் செல்வராகவனுக்கு இருக்கிறது.

தனுஷின் இயக்குநர்களின் பட்டியலை ஆய்வு செய்தால், பெரும்பாலும் வெற்றிப் பெற்ற இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார் அல்லது முதல் படத்தில் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர்களுக்கு இரண்டாம் பட வாய்ப்பை தனுஷ் கொடுத்திருப்பார். ஒரு சில படங்களில் மாற்றம் இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் புதுமுக இயக்குநர்களுக்கு தனுஷ் வாய்ப்பு கொடுத்ததில்லை.

சமீப காலங்களில் இயக்குநரைத் தெர்ந்தெடுப்பதில் சில ரகசிய ஃபார்முலாக்களை தனுஷ் பின்பற்றுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரிய இயக்குநர்களை நம்பி படம் நடித்தால் ஹிட்டாவதையும், ஃப்ளாப் ஆவதையும் கணிக்க முடியவில்லை. அதனால், முதல் படத்தில் ஹிட் கொடுக்கும் இளம் இயக்குநர்களுக்கு, இரண்டாம் பட வாய்ப்பை தனுஷ் கொடுக்கிறார். அறிமுகப் படத்தில் பெரியளவு கவனத்தை ஈர்க்கும் இயக்குநர்களுக்கு இவரே போனில் அழைத்து கதை இருந்தால் தயார் செய்யுங்கள் என்று சொல்கிறார் தனுஷ்.

அப்படித்தான், பரியேறும் பெருமாள் படம் வெளியான நேரத்தில் மாரி செல்வராஜை அழைத்து கதை இருந்தால் தயார் செய்ய சொன்னார் தனுஷ். அப்படித்தான், ‘கர்ணன்’ படம் உருவானது. காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும் படத்தைக் கொடுத்த பாலாஜி மோகனுக்கு மாரி பட வாய்ப்பு கிடைத்தது. ஹரி ஓம் குறும்படம் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்த பரத்பாலாவுக்கு ‘மரியான்’ வாய்ப்பு கிடைத்தது. தனுஷின் தயாரிப்பில் காக்கிச் சட்டை, எதிர்நீச்சல் என இரண்டு ஹிட் கொடுத்ததால் கொடி, பட்டாஸ் படங்களை இயக்கும் வாய்ப்பு துரைசெந்தில் குமாருக்கு கிடைத்தது.

தற்போது, துருவங்கள் பதினாறு படத்தைக் கொடுத்த கார்த்திக் நரேன் தனுஷின் 43ஆவது படத்தை இயக்கிவருகிறார். ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் அடுத்தக் கட்டமாக தனுஷை இயக்க கதை உருவாக்கும் பணிகளில் இருக்கிறார். இப்படி, ஹிட் கொடுக்கும் இளம் இயக்குநர்களைத் தேடிப் பிடித்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் தனுஷ்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். சிபி சக்ரவர்த்தி எனும் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகிவரும் படம் ‘டான்’. படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தின் கதையை தனுஷை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர் சிபி. இவர், அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டான் படத்தின் கதையை தனுஷிடம் சொல்ல பல முறை முயற்சி செய்திருக்கிறார். ஆனால், எந்த ரெஸ்பான்ஸும் தனுஷ் சார்பிலிருந்து வரவில்லையாம். அதன் பிறகே, சிவகார்த்திகேயனிடம் கதைச் சொல்லி ஓகே செய்திருக்கிறார்கள். இந்த டான் படத்தில் பெரிய ஹிட் கொடுத்துவிட்டால், நிச்சயம் தனுஷ் தரப்பிலிருந்து அடுத்தப் படத்துக்கான போன் கால் வரலாம் என பேசிக்கொள்கிறார்கள் திரையுலகத்தினர்.

தனுஷின் இந்த ஸ்டைல் நிச்சயம் பாராட்ட வேண்டியதும்கூட. நல்ல இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதும், நல்ல கதைகளுக்கு உயிர் கொடுப்பதும் ஆரோக்கியமான விஷயம் தானே.

- தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

திங்கள் 31 மே 2021