மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

டி20 உலகக் கோப்பைக்கு அவகாசம் கேட்கும் இந்தியா!

டி20 உலகக் கோப்பைக்கு அவகாசம் கேட்கும் இந்தியா!

டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து மேலும் ஒரு மாதக் காலத்துக்கு ஐசிசியிடம் அவகாசம் கேட்பது என்று இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவகாசம் கேட்டதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டி 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்தப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இதுவரை ஆறு டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு முறையும் (2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014), தலா ஒரு தடவையும் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றின.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை போட்டி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அந்த நாட்டில் இந்தப் போட்டி நடக்கிறது.

7ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான ஒன்பது இடங்கள் குறித்து கிரிக்கெட் வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பரிந்துரை செய்திருந்தது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, லக்னோ, தர்மசாலா, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இறுதிப் போட்டியை நவம்பர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்ய வேண்டும் என்று ஐசிசி கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து மேலும் ஒரு மாத காலத்துக்கு ஐசிசியிடம் அவகாசம் கேட்பது என்று கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, “டி20 உலகக் கோப்பையைப் பொறுத்த வரை ஐசிசியிடம் அவகாசம் கேட்டு பின்னர் முடிவு செய்வோம். தற்போதைய சூழலில் பாதுகாப்பான இடத்தில் வைத்துதான் கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோம். வரும் நாட்களில் சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஐசிசியிடம் அவகாசம் கேட்டு அதற்கேற்ப முடிவு செய்வோம் என்பதை மட்டும்தான் தற்போது கூற முடியும்” என்று கூறியுள்ளார்.

ஐசிசி கூட்டம் நாளை (ஜூன் 1) நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை குறித்து அவகாசம் கேட்கப்படும். இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி இதை வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு தற்போது அதிகமாக இருப்பதால் டி20 உலகக் கோப்பை குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பிசிசிஐ அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஐசிசி உலகக் கோப்பைக்கு மத்திய அரசிடம் இருந்து கிரிக்கெட் வாரியம் வரி விலக்கு பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் கால அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

-ராஜ்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

திங்கள் 31 மே 2021