மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 மே 2021

என் தந்தையை நம்புகிறேன்: கவிஞர் மதன் கார்க்கி

என் தந்தையை நம்புகிறேன்: கவிஞர் மதன் கார்க்கி

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். அதுபோன்று திரைப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்கிடையில் விருதை ஏற்க மனம் மறுக்கிறது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு கேரள மாநில ஓ.என்.வி விருது சம்பந்தமான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்க சின்மயி, பார்வதி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்ததும், இந்த விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஓ.என்.வி விருது குழு அறிவித்ததும் விவாதப் பொருளாக இனிமேல் தொடராது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமூக வலைதளங்களில் இல்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்குவதையும், முடிந்துபோன சர்ச்சைகளை மீண்டும் பரபரப்பாக்கும் நெட்டிசன்கள் குவிந்து கிடக்கின்றனர். இவர்களில் சிலர் சுயவிருப்பத்தின் பேரில் நேரடியாக அல்லது மற்ற நபர்களால் இயக்கப்படும் போக்கு ட்விட்டரில் அதிகரித்து வருகிறது.

அப்படிப்பட்ட நெட்டிசன் ஒருவர் சின்மயிடம், 'வைரமுத்துவை ஏன் உங்கள் திருமணத்துக்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள்' எனக் கேட்டு அது சம்பந்தமான புகைப்படத்தை வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த சின்மயி, 'வைரமுத்துவை எனது திருமணத்துக்கு அழைக்குமாறு எனக்குக் கூறியதே அவர் மகன்தான்' எனப் பதிலளித்திருந்தார்.

ஒன்றுமே இல்லாத வாய்க்கு அவல் கிடைத்த கதையாக, சின்மயி பதிலை துருப்புச்சீட்டாக பயன்படுத்திய நெட்டிசன், சின்மயி பதிலைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மதன் கார்க்கி ட்விட்டரில், ‛இது மற்றுமொரு பொய். அவர்தான் என் தந்தையைத் தனது திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால் அவரை பார்க்க மறுத்துவிட்டார். அதன் பிறகு என்னிடம் சொல்லி அவரை பார்க்க அனுமதி பெற்றுத் தரச் சொன்னார். நானும் செய்தேன். அதன்பின் என் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்' எனக் குறிப்பிட்டுள்ளார் மதன் கார்க்கி.

இது சம்பந்தமாகச் சிலர், 'உங்களது தாய், தந்தைமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சிலர் முன்வைக்கும்போது நீங்கள் யாரை நம்புவீர்கள்?' என்று ஒரு கேள்வி எழுப்பியபோது, 'நான் எனது தந்தையை நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

திங்கள் 31 மே 2021