மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

ஏன் இப்படியாகிவிட்டார் வெங்கட் பிரபு?

ஏன் இப்படியாகிவிட்டார் வெங்கட் பிரபு?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என ஒரு பழமொழி உண்டு. இப்போதைக்கு இந்தக் கூற்றுக்குச் சரியாகப் பொருந்துகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஏன் என்பதை வாசிப்பின் இறுதியில் உணர்வீர்கள்.

சிம்பு நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது மாநாடு படம். சிம்புவுடன் எஸ்.ஏ.சி., எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது.

வெங்கட் பிரபுவின் சினிமா கிராப் சுவாரஸ்யமான ஒன்று. சென்னை 28 எனும் பெரிய ஹிட் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதன்பிறகு, அஜித் நடிக்க மங்காத்தா பெரிய ஹிட். இது, வெங்கட் பிரபுவை டாப் இயக்குநர்கள் பட்டியலுக்குக் கொண்டு சென்றது. சென்னை 28 இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும் சூர்யா நடிக்க மாசு, கார்த்தி நடிக்க பிரியாணி என பெரிய ஹீரோக்களையே இயக்கியவர் வெங்கட் பிரபு. தற்பொழுது சிம்புவை இயக்கி வருகிறார். அப்படியான ஒரு இயக்குநர் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் அடுத்தப் படத்தின் அறிவிப்பு தான் அது.

வெங்கட் பிரபுவின் 10ஆவது படமாக உருவாகும் புதிய படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மிகப்பெரிய நடிகர்களை இயக்கியவர் , அசோக் செல்வனை தேர்ந்தெடுத்திருப்பதைத் தான் கட்டெறும்பு கதையோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறோம்.

படத்தின் அறிவிப்பே இப்போது தான் வந்திருக்கிறது. ஆனால், முழு படத்தையுமே முடித்துவிட்டாராம் வெங்கட் பிரபு. குறைந்த பட்ஜெட்டில் முடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தில் அசோக் செல்வனுடன் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் என மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். எப்படியும், இசை பிரேம்ஜியாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கூடுதல் தகவலாக, படத்தின் தலைப்பு `மன்மத லீலை` என வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே மன்மத லீலை எனும் பெயரில் பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடிக்க 1976ல் படம் வெளியானது. முறையாக, படத்தின் பெயருக்கான உரிமையைப் பெற வேண்டும். அதனால் தான் பட அறிவிப்பின் போது, பெயரை அறிவிக்கவில்லை. விரைவிலேயே உரிமையைப் பெற்றுவிட்டு, அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். ஒருவேளை `மன்மத லீலை` பெயருக்கான உரிமை கிடைக்கவில்லையென்றால் படத்தின் பெயர் மாறலாம்.

- தீரன்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

ஞாயிறு 30 மே 2021