மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 மே 2021

உறியடி : மறக்கமுடியாத சம்பவங்கள்!

உறியடி : மறக்கமுடியாத சம்பவங்கள்!

இளைய சமூகத்திடம் சாதி விதைக்கப்பட்டு, அது பழுத்துத் தொங்கிக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. அதே இளைய சமூகத்தின் வழியே சாதி எதிர்ப்பை, சமூகப் புரட்சியைப் பேசிய திரைப்படம் உறியடி. இந்தப் படம் வெளியாகி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது.

2016ல் வெளியான உறியடி திரைப்படம் மூலமாக இயக்குநராகவும், நடிகராகவும் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் குமார். இயக்குநர் நலன் குமாரசாமியின் `பின்றோம் பிக்சர்ஸ்' மூலமாக இந்தப் படம் வெளியிடப்பட்டது.

சினிமாவின் மீது கொண்ட அதீத காதலாலும், ஆர்வத்தினாலும் வேலையை விட்டு விட்டு, இந்தப் படத்தை தயாரித்து, நடிக்க முடிவெடுத்தார் இயக்குநர் விஜயகுமார். தமிழில் ஒரு வருடத்துக்கு 300-க்கும் மேல் படம் வெளியாகிறது. வெளியாகும் எல்லா படங்களும் ஹிட்டாவதில்லை. படத்தின் கரு, எடுக்கப்பட்ட விதம், கதை பொருத்தே படத்தின் வெற்றி முடிவாகிறது. மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து படத்தை எடுக்க களமிறங்கினார் விஜயகுமாரென்பதே மிகப்பெரிய விஷயம்.

சரி, படத்தை துவங்கிவிட்டார். இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியபோது சென்னை வெள்ளம் வந்தது. அதனால், படத்தின் ஃபுட்டேஜ் இருக்கும் ஹார்ட் டிஸ்க் வீணாகிவிட, பல காட்சிகள் அழிந்துவிட்டது. அதையெல்லாம் சமாளித்து படத்தை பக்காவாக எடிட் செய்து வெளியே கொண்டுவந்தார் இயக்குநர் விஜயகுமார்.

2016 மே 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிவிட்டது. ஆனால், இந்தப் படம் வெளியான முதல் இரண்டு நாட்கள் இப்படியொரு படம் வந்திருக்கிறதென்பதே மக்களுக்குத் தெரியாது. முதல் மூன்று நாட்களின் வசூல் தான் படத்தின் மிகப்பெரிய லாபத்தை ஈட்டித்தரும். கதை முடிந்ததென்றே நினைத்தார்கள். ஆனால், மெல்ல மெல்ல ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாக வாய்வழியாக படத்தைப் பற்றி பேச்சுகள் எழுந்தது. அதன்பிறகே, திரையரங்கிற்கு கூட்டம் வரத் துவங்கியது.

அடுத்தடுத்த வாரமே பெரிய ஹீரோஸ் படங்கள் வெளியானதால், திரையரங்கிலிருந்து உறியடி நீக்கப்பட்டது. அதன்பிறகு, பைரஸி மூலமாகவே எக்கச்சக்க ரசிகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு கொண்டாடினார்கள்.

"ஐயோ இவ்ளோ நல்லப் படத்தையா பைரஸியில பார்த்தோம்’னு இயக்குநர் விஜய்குமாரின் வங்கி கணக்குக்கு டிக்கெட் தொகையை ரசிகர்கள் அனுப்பி வைத்ததெல்லாம் நடந்தது. முதல் பாகத்தின் வெற்றியினால், உறியடி 2 படம் உருவானது. அந்தப் படத்தை சூர்யா தயாரித்தார்.

சாதியத்துக்கு எதிரான படமென்றால், மிகப்பெரிய அரசியல் கட்சிகளையும், நடப்பு அரசையும் தாக்கி படமெடுக்க வேண்டுமென்பது அவசியமில்லை. எதார்த்தத்தில் சின்னச் சின்ன சாதிய சங்கங்களே மிகப்பெரிய சாதிய அரசியலுக்கு காரணமாக இருக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டிய இடத்தில் நிமிர்கிறது திரைக்கதை. சாதியில் அழுக்கேறிப் போய் இருக்கும் மூத்த குடிமக்களுக்காக படத்தை எடுத்து நேரத்தை வீணடிக்காமல், இளம் தலைமுறைக்கென படத்தைக் கொடுத்திருப்பார் இயக்குநர்.

குறிப்பாக, படத்தின் இடைவேளைக் காட்சியில் மிரட்டியிருப்பார்கள். தங்களைத் தாக்க வருபவர்களை மாணவர்கள் நான்கு பேரும் எதிர்கொள்ளும் இடம், இதுவரை தமிழ் சினிமாவில் இடம்பெறாத ஒரு இடைவேளைக் காட்சி என கொண்டாடப்பட்டது. ஒர் இரவில் சாதியக் கட்சித் தலைவர்களை உறித்தெடுக்கும் இடம், கடைசி 15 நிமிடங்களில் வசனங்களின்றி மிகப்பெரிய கருத்துகளை ஆடியன்ஸ் மத்தியில் கடத்திய விதமென... எத்தனை ஆண்டுகளானாலும் ‘உறியடி’ மிக முக்கியமான படமென்பதில் சந்தேகமில்லை.

ஒரு திரைப்படம் கையிலெடுத்த கதைக்கும், கதை சொல்ல வரும் கருத்துக்கும் நேர்மையாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் ‘உறியடி’ நேர்மையான சினிமா.

- தீரன் "

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 29 மே 2021