மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட விருது ரத்து?

வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட விருது ரத்து?

கேரள மாநிலத்தில் மரியாதைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக மதிக்கப்படும் விருது ஓஎன்வி குறுப் இலக்கிய விருது.

இந்த விருது தமிழகத்தை சேர்ந்த திரைப் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இந்த வருடம் வழங்கப்பட இருப்பதாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது.

விருது அறிவிக்கப்பட்டு ஊடகங்களில் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே அதற்கு எதிராக கண்டனக் குரல்கள் அடர்த்தியாக எழுந்தன.

இந்த சூழ்நிலையில், வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக ஓஎன்வி கல்சுரல் அகாடமி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஞானபீட விருது பெற்ற கவிஞர் ஓஎன்வி குறுப் பெயரில் 2017ம் வருடம் முதல், ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்து தேர்வு செய்யப்பட்டார். வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில், பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த உமன் இன் சினிமா கலெக்டிவ், பல்வேறு புகார்களை எதிர்கொள்ளும் வைரமுத்துவுக்கு இந்த விருது எப்படி அளிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வியெழுப்பியது.

இந்த விருது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது குறித்து நடிகை பார்வதி உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், வைரமுத்துவின் எழுத்துகளுக்காகவே இந்த விருதுக்கு, அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய நடத்தை, ஒழுக்கத்தை ஆராய்வது தங்கள் நோக்கமல்ல என்று ஓஎன்வி குறுப் கல்சுரல் அகாடமியின் தலைவரும் இயக்குனருமான அடூர்கோபாலகிருஷ்ணன்

தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும் எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில், மே 28ஆம் தேதி ஓஎன்வி கல்சுரல் அகாதெமியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

தேர்வுக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த ஆண்டு அளிக்கப்பட்ட விருது மறுபரிசீலனை செய்யப்பட இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த அமைப்பின் தலைமைப் புரவலராக இருக்கிறார். மேலும் எம்.டி. வாசுதேவன் நாயர், பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் ஆகியோரும் இந்த அமைப்பின் புரவலர்களாக உள்ளனர்.

விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்த முறை கவிஞர் பிரபா வர்மா, மலையாள பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் வல்லத்தோள், எழுத்தாளர் ஆலங்கொடே லீலா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த அமைப்பின் தலைவராக இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார்.

ஓஎன்வி குறுப் இலக்கிய விருது என்பது மலையாளத்திலும் பிற இந்திய மொழிகளிலும் எழுதும் கவிஞர்களுக்கு அளிக்கப்படும் விருதாகும். ஒரு கேடயமும் 3 லட்ச ரூபாய் பணமுடிப்பும் கொண்டதாகும் இந்த விருது.

-இராமானுஜம்

.

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

வெள்ளி 28 மே 2021