மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 மே 2021

படப்பிடிப்புக்கு வர மறுத்த கண்ணம்மா

படப்பிடிப்புக்கு வர மறுத்த கண்ணம்மா

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான் மக்களின் ஒரே பொழுது போக்கு.

2020 கொரோனா ஊரடங்கு அமலிலிருந்தபோது பழைய தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொடர்களின் படப்பிடிப்புகளுக்குத் தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை வந்து மீண்டும் ஒரு ஊரடங்கு நடைமுறைக்கு வரும் என தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள், தொலைக்காட்சி நிர்வாகங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதிலும் தொலைக்காட்சி தொடர்களுக்கான சூட்டிங் தெரிந்தும் தெரியாமலும் நடந்துகொண்டுதான் இருந்தன.

அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணங்களும் ஏற்பட்டதாகச் செய்திகள் ஊடகங்களில் வெளியானபோது தமிழக எல்லைக்குள் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடையாது என அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இதனையும் மீறி சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள ஈ.வி.பி படப்பிடிப்பு தளத்தில் ரகசியமாக மலையாள சீரியலுக்கான ஷுட்டிங் நடப்பதை அறிந்து அந்த படப்பிடிப்பு தளத்தை மொத்தமாகப் பூட்டி சீல் வைத்தது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்.

இதனால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி டிஆர்பி தரவரிசை குறைவதுடன், ரசிகர்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தயாரிப்பாளர்களை சேனல் நிர்வாகம் எச்சரித்தது.

எனவே ஆளுங்கட்சி ஆதரவு சேனல்கள் தவிர்க்க முடியாத சில தொடர்களின் படப்பிடிப்புகளை ரகசியமாக நடத்தியுள்ளன. இதனை அறிந்த விஜய், ஜீ ஆகிய முன்னணி நிறுவனங்கள் சில முக்கிய தொடர்களின் படப்பிடிப்புகளை ரகசியமாக நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ஊரடங்கு இல்லாத மாநிலங்களுக்குப் போய்ப் படப்பிடிப்பு நடத்துகிறது என்கிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு அதன் கதாநாயகி ரோஷினியை படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். அரசாங்கம் ஊரடங்கு அறிவித்திருக்கிறது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, வெளியில் நடமாடுவதே ஆபத்தானது என கூறுகின்றனர். உயிருடன் இருப்பதே பெரும் பாக்கியம் என எல்லோரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பு நடத்தலாமா? பணம் மட்டும் இருந்தால் போதுமா? அதை அனுபவிக்க உயிர் வேண்டாமா கொஞ்சம்கூட மனசாட்சியில்லாமல் இப்படிச் செய்கிறீர்களே? என்று ரோஷினி மறுத்துவிட்டாராம்.

அரசாங்கம் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிவிக்கும்வரை நான் படப்பிடிப்புக்கு வரமாட்டேன். இதனால் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என்று கறாராகக் கூறியிருக்கிறார். இந்த தகவல் அறிந்த சின்னதிரை கலைஞர்கள், தொழிலாளர்கள் நடிகை ரோஷினியை பாராட்டி வருகின்றனர்.

-இராமானுஜம்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

வெள்ளி 28 மே 2021