cவரலாற்று சாதனை படைக்குமா ஆர்.ஆர்.ஆர்?

entertainment

இந்திய சினிமாவில் குறிப்பிட்ட ஒரு மொழி திரைப்படங்களில் சராசரியான ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களை வைத்து முதல் படத்தில் அகில இந்திய ரீதியிலும், அதன் இரண்டாம் பாகத்தில் சர்வதேச ரீதியில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்ற படமான பாகுபலி, பாகுபலி-2 படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

சர்வதேச சினிமா படைப்பாளிகளும், வியாபாரிகளும் ராஜமெளலியின் அடுத்த படம் எது என ஆவலுடன் எதிர்பார்பார்த்திருந்தனர்.

300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம், ரத்தம் ரணம் ரெளத்திரம்( ஆர்.ஆர்.ஆர்’). இப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்கி முடித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

ஆந்திராவின் இரண்டு புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம், கோமரம் பீம்மா இருவரின் வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு 1920-களின் பின்னணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.

இந்தி நடிகரான அஜய் தேவ்கன், இயக்குனர் சமுத்திரக்கனி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நாயகிகளாக இந்தி நடிகை அலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த வருடம் நவராத்திரி பண்டிகை விடுமுறை தினத்தில் இத்திரைப்படத்தை உலகமெங்கும் திரையிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்திய சினிமாவில் படத்தின் வியாபாரம், வசூல் தகவல்களை தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக அறிவிப்பது இல்லை. படத்தின் பட்ஜெட், வியாபாரம், வசூல் தகவல்களை யூகத்தின் அடிப்படையிலேயே ஊடகங்கள் தொடக்ககாலம் முதல் இன்றுவரை வெளியிட்டு வருகின்றன.

பல நேரங்களில் இது பொய்யாகி போய்விடுவதும் உண்டு. இந்தியாவில் மல்டிபிளக்ஸ், சினி மால், தியேட்டர்கள் உருவான பின்பு இணையவழி டிக்கெட் முன்பதிவு பிரபலமானது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் திரையரங்குகளை நிர்வகிக்கவும், படத்தயாரிப்பில் ஈடுபட தொடங்கிய பின்பு படத்தின் பட்ஜெட், வசூல் விபரங்கள் பகிரங்கமாக வெளியிட தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஆர்.ஆர்.ஆர்’படத்தின் மொத்த பட்ஜெட், வியாபார விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதுவரையில் எந்தவொரு இந்தியத் திரைப்படமும் செய்யாத சாதனையாக ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வியாபார ஒப்பந்தங்களின் தொகை இருக்கிறது.தென்னிந்திய மொழிகள் அனைத்துக்குமான தியேட்டர்களில் திரையிடுவதற்கான உரிமை 348 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் திரையரங்க உரிமை 230 கோடிகள்,தமிழக திரையரங்கு உரிமை 50 கோடிகள், கர்நாடகா திரையரங்கு உரிமை 43 கோடிகள்,கேரளா திரையரங்கு உரிமை 10 கோடிகள்,இந்தி திரையரங்கு உரிமை 140 கோடிகள், வெளிநாட்டு உரிமை 77 கோடிகள்.

ஆக மொத்தத்தில், தியேட்டர்களில் திரையிடுவதற்கான உரிமைகள் வியாபாரம் மூலம், ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு 550 கோடிகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி-2 படம்தான் தென்னிந்திய சினிமாக்களில் மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு மிக அதிகமான வசூலையும் பெற்ற திரைப்படமாக இன்றுவரை இருந்து வருகிறது. ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பட்ஜெட் 400 கோடிகள் என்கிறது தயாரிப்பு தரப்பு.

திரையரங்கு வெளியீட்டுக்கான உரிமைகள் மூலம் 550 கோடி ரூபாயும், பிற உரிமைகள் மூலம் 325கோடி ரூபாயும் ஆகமொத்தம் 875கோடி ரூபாய் அளவுக்கு தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்ட ஒரு படம் வியாபாரம் ஆகியிருப்பது தெலுங்கு மொழி சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கும் முதல் முறை என்கிறது, பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்.

மேற்கண்ட வியாபார தகவல்களின் அடிப்படையில் ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய் வசூல் கிடைக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் முழுமையாக செயல்படவில்லை.

இந்தியாவில் பிரதான பாக்ஸ் ஆபீஸ் வசூல் மையங்களாக இருக்கக் கூடிய இந்தி பேசும் மாநிலங்கள், தென் இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதை திரைப்பட துறையினரால் அனுமானிக்க முடியவில்லை.

திரையரங்குகள் உலகம் முழுவதும் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க தொடங்கினால் மட்டுமே வரலாற்று சாதனையாக கூறப்படும் ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் 875 கோடி ரூபாய் வியாபாரம் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முடியும், இல்லை என்றால் இந்த வியாபார கணக்குகள் மாறுதலுக்கு உட்பட வேண்டியதிருக்கும்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *