மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 மே 2021

'கைதி 2' வருமா?

'கைதி 2' வருமா?

தமிழ் சினிமாவில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான பிகில் படம் வெளியான அன்று, 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான கைதி படமும் வெளியானது.

பிகில் படத்தின் மொத்த வெற்றியும், வசூலும் படத்தின் கதாநாயகன் விஜய் என்கிற ஒற்றை நபரை நம்பி இருந்தது. மாநகரம் படத்தின் வெற்றி, அடுத்து விஜய் படத்தை இயக்க போகும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம், தேசிய அளவில் கவனம் பெற்ற, விருதுகளை வென்ற ஜோக்கர், அருவி படங்களை தயாரித்த டிரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பு என்கிற எதிர்பார்ப்புடன் சினிமா ரசிகன் எதிர்பார்த்த படம் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி.

கைதி வெளியாவதற்கு முதல் நாளே வியாபார அடிப்படையில் சுமார் 25 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியிருந்தது. பிகில் படத்துக்குப் போட்டியாக கைதி படம் தாக்குப்பிடிக்குமா என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டபோது கைதிக்குப் போட்டியாக பிகில் என ஏன் கூறக் கூடாது என்றார்.

மேலும், நாங்கள் படத்தின் உள்ளடக்கத்தை நம்புகிறோம், தியேட்டருக்குப் பார்வையாளரை வரவழைக்க பிரபலமான நடிகர் தேவை. அதேநேரம் உள்ளடக்கம் சரியில்லை என்றால் முதல் நாளே படத்தின் கணக்கு முடிக்கப்பட்டு விடும் என்றார்.

பிகில் ஆரவாரத்தில் முதல் நாள் முடங்கிய கைதி படத்தின் டிக்கெட் விற்பனை, மறுநாள் சூடு பிடித்து மாலையில் இருந்து அரங்கம் நிரம்பி வழிய தொடங்கியது. படத்தில் கதாநாயகி இல்லை, டூயட் இல்லை, காமெடி நடிகர் இல்லை. ஆனால், குடும்பங்கள் படம் பார்க்க குவிந்தது.

தயாரிப்பாளர் எதிர்பார்த்தபடி அசுரத்தனமான வெற்றியை கைதி சாத்தியமாக்கியது. இந்தியிலும் 'கைதி' ரீமேக் ஆகவுள்ளது. இந்தப் படத்தின் வெற்றி காரணமாக 'கைதி 2' தயாரிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.

படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நாயகன் கார்த்தியும் 'கைதி' படத்தின் இறுதியிலிருந்து 2ஆம் பாகம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு 'கைதி 2' குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது. இதனிடையே, ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் பக்கத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கலந்துகொண்டார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில் கைதி 2 குறித்த கேள்விக்கு எஸ்.ஆர்.பிரபு, "கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக கைதி 2 உருவாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டபோது, "கைதி இரண்டாம் பாகம் தயாரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாயகன் கார்த்தி இருவருமே ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை உரிய காலத்தில் முடித்து கொடுக்க கொரோனா தொற்று, அதையொட்டி மத்திய மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு ஒத்துழைக்கவில்லை. இரண்டாம் அலை ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதை இங்கு யாராலும் அனுமானிக்க முடியவில்லை. தேசமே மருத்துவ நெருக்கடியில் இருக்கும்போது புதிய படத் தயாரிப்பை பற்றி நினைத்துகூட பார்க்க முடியவில்லை. கைதி 2 கட்டாயம் தயாரிக்கப்படும் அதற்குக் காலச்சூழல் முக்கியம்” என்றார்.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

புதன் 26 மே 2021