மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை!

ஐபிஎல் தொடரை நடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை!

கொரோனா பாதிப்பால் பாதியில் நின்ற ஐபிஎல் ஆட்டங்களைத் தொடர்ந்து நடத்த வசதியாக டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் நடந்து வந்த 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியில் நின்று போனது. நான்கு அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து வேறு வழியின்றி ஐபிஎல் போட்டியைக் காலவரையின்றி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஒரு வேளை மீதமுள்ள ஐபிஎல் போட்டியை நடத்த முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏறக்குறைய ரூ.2,500 கோடி வருவாய் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்பாக வெளிநாட்டில் எஞ்சிய ஐபிஎல் போட்டியை நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டுகிறது. இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஒன்றில் இந்தப் போட்டி நடத்தப்பட வாய்ப்புள்ளது.

இப்போது டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்குப் போதிய கால இடைவெளி தேவைப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது டெஸ்ட் போட்டியை ஒரு வாரத்துக்கு முன்பாக நடத்தி முடிக்கும் வகையில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டால் அதன் பிறகு கிடைக்கும் மூன்று வார இடைவெளியில் எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை நடத்த முடியும். பெரும்பாலான நாட்களில் இரண்டு ஆட்டங்கள் வீதம் நடத்திவிடலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கணக்கு போட்டுள்ளது.

எல்லாம் சரியாக அமைந்தால் இங்கிலாந்திலேயே மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களை நடத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயத்தமாக உள்ளது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்பது சந்தேகம்தான் என்று தெரிகிறது.

ஏனெனில் ஜூலை 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை தி ஹண்ட்ரடு (100 பந்து போட்டி) கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. டெஸ்ட் அட்டவணையில் திருத்தம் செய்தால், தி ஹண்ட்ரடு போட்டிக்கு மைதானத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும். அத்துடன் இங்கிலாந்து வீரர்கள் இதில் பங்கேற்பதில் பிரச்சினைகள் வரலாம். அது மட்டுமின்றி ஹோட்டலில் முன்பதிவு, கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒளிபரப்புதாரர்களுக்குரிய அட்டவணை, டிக்கெட் விற்பனை ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஏற்கனவே ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி விட்டனர். இதில் தேவையில்லாமல் குழப்பம் உருவாகும். அதனால் இங்கிலாந்து என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் நேற்று (மே 22) அளித்த போட்டியில், “இந்த கொரோனா காலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். எனவே இப்போதைக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி நடக்கும்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

ஞாயிறு 23 மே 2021