மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை வெல்வது சவாலானது!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை வெல்வது சவாலானது!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சவாலாக இருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேற உள்ள இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் அடுத்த மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம்தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி பெரும்பாலான நியூசிலாந்து அணி வீரர்கள் இங்கிலாந்துக்குச் சென்று விட்டனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரிலும் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் வில்லியம்சன், “இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது அது எப்போதுமே அற்புதமான ஒரு சவாலான இருந்திருக்கிறது. எனவே அவர்களுக்கு எதிராக ஆட இருப்பது உண்மையிலேயே பரவசமூட்டுகிறது. அதுவும் இறுதிப்போட்டி என்றால் சொல்லவே வேண்டாம். உற்சாகமும், ஊக்கமும் பீறிடுகிறது. இதில் வெற்றி பெறுவது மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும்.

உலக சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றை எட்டுவதற்காக நடந்த போட்டிகள் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருந்ததைப் பார்த்தோம். குறிப்பாக இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி மற்றும் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது... இவ்விரு தொடர்களும் பரபரப்புடன் நெருக்கடி நிறைந்ததாக அமைந்தது.

சாதகமான முடிவுகளைப் பெற கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அந்த வகையில் இவ்விரு போட்டிகளும் மிகவும் சிறந்ததாக இருந்தன” என்று கூறியுள்ளார்.

‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் தொடுப்பதில் வல்லவரான நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் கூறுகையில், “இங்கிலாந்தில் சீதோஷ்ண நிலை முக்கிய பங்கு வகிக்கும். இந்திய அணியில் நிறைய தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வெவ்வேறு நாடுகளில் நன்றாகச் செயல்பட்டு உள்ளனர். இங்குள்ள மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் அவர்களால் பந்தை ‘ஸ்விங்’ செய்ய முடியும். ஆனால் நன்கு வெயில் அடிக்கும்போது ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக மாறி விடும். அத்தகைய சூழலில் அவர்களின் பந்து வீச்சின் தாக்கம் எடுபடாது.

இங்கிலாந்தில் சீதோஷ்ண நிலை ஒரே மாதிரியாக இருக்காது. எப்போது வேண்டுமானாலும் மாறும். எனவே நான் அதிகமாக எதையும் திட்டமிடப் போவதில்லை. கட்டுப்படுத்தக்கூடியவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்குப் புறப்படுகிறது. அங்கு முதலில் ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தைச் சந்திக்கும் இந்திய அணி, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

-ராஜ்

.

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வியாழன் 20 மே 2021