மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 மே 2021

ஐபிஎல்: இனி இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்!

ஐபிஎல்: இனி இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்!

பாதியில் நின்றுபோன ஐபிஎல் போட்டியை மீண்டும் நடத்தும்போது அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது. இவற்றை நடத்த முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏறக்குறைய ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். எனவே எஞ்சிய ஆட்டங்களை வெளிநாட்டில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.

இந்த நிலையில் மேலும் ஒரு பின்னடைவாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களை எங்கு நடத்தினாலும் அதில் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச போட்டி காரணமாக பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஷ்லே ஜைல்ஸ், “வருங்கால போட்டி அட்டவணைப்படி எங்களுக்கு நிறைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வருகின்றன. அவற்றில் இங்கிலாந்து வீரர்களை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். இதன்படி எங்கள் அணி பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கு (செப்டம்பர், அக்டோபர்) சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும்பட்சத்தில், அதில் ஐபிஎல் போட்டியில் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி ஜனவரி கடைசியில்தான் முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பாகவே ஐபிஎல் போட்டிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது. அதனால்தான் நியூசிலாந்து தொடரை தவற விட்டாலும் பரவாயில்லை. ஒப்பந்தபடி ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட இங்கிலாந்து வீரர்களை அனுமதித்தோம். ஆனால், அதற்குள் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நின்று போய் விட்டது. ஐபிஎல் போட்டி மீண்டும் எப்போது, எங்கு நடத்தப்படும் என்பது இப்போது வரைக்கும் யாருக்கும் தெரியாது.

அதேநேரம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து எங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. இதில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்த போட்டிகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் தனது ட்விட்டரில், “ஐபிஎல் டி20 தொடர் மீண்டும் நடத்தப்பட்டால், தங்களின் சிறந்த வீரர்களை அதில் விளையாடவிடாமல் எவ்வாறு இங்கிலாந்து அணி தடுக்கப் போகிறது என்பதைப் பார்க்கவும், என்ன நடக்கும் என்பதை அறியவும் ஆர்வமாக இருக்கிறது.

நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக நின்றபோது என்னுடன் யாருமில்லை, தனியாக இருந்தேன். இந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால், ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் ஐபிஎல் டி20 தொடரில் விளையாட முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சாம் கர்ரன், மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்), கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), இயான் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்) ஆகிய 14 வீரர்கள் ஐபிஎல் ஒப்பந்தத்தில் உள்ளனர். இவர்கள் ஆட முடியாமல் போனால் ஐபிஎல் போட்டி களையிழந்து விடும் என்பது நிச்சயம்.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 13 மே 2021