மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

இந்தியன் - 2: பேச்சுவார்த்தையும் சட்டப் போராட்டமும்!

இந்தியன் - 2: பேச்சுவார்த்தையும் சட்டப் போராட்டமும்!

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1996இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. 2017 பிக் பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியின்போது மேடையில் வைத்து இதை அறிவித்தார் கமல்ஹாசன். இந்த அறிவிப்பின்போது இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு உடன் இருந்தார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாகக் கூறி தில் ராஜு, தயாரிப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் 'இந்தியன் - 2' படத்தைத் தயாரிக்க முன்வந்தது. பட்ஜெட் அதிகம் எனக் கூறி எந்த தயாரிப்பாளர் இந்தியன் - 2 தயாரிப்பில் இருந்து விலகிக்கொண்டாரோ, அதே தில் ராஜு தயாரிக்கும் தெலுங்குப் படத்தை இயக்குவதற்கு நான்கு வருடங்கள் கழித்து ஒப்பந்தம் செய்து ஷங்கர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்தியன் - 2 படத்தை முடித்துக்கொடுக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என லைகா தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைப் பேசி முடித்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் இரு தரப்புக்கும் அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் லைகா - ஷங்கர் தரப்பில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை முடிந்ததால் அவரது சொந்த தயாரிப்பு படத்தில் நடிக்க தொடங்கினார். இந்தியன் - 2 பஞ்சாயத்து நீதிமன்றம் வரை சென்று ஊடகங்களில் விவாதப்பொருளானது.

கொரோனா கொடூரத்தில் தயாரிப்பாளர்கள் தாக்குப் பிடித்திருப்பது சிரமமான காரியம். இதில் யார் பெரியவர், எவர் பக்கம் தவறு இருக்கிறது என்கிற ஆராய்ச்சி வேண்டாம். ஈகோவை விட்டு , கறாராக சம்பளத்தைக் கேட்காமல் படத்தை முடித்துக் கொடுப்பது எல்லோருக்கும் நல்லது என்பதைக் காட்டிலும், தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது என்று திரைப்படத் துறையில் உள்ள மூத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தரப்பில் கமல் - ஷங்கர் தரப்புக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக கமல்ஹாசன் ஷங்கர், லைகா தரப்பில் நேரடியாகப் பேச தொடங்கியுள்ளார், பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் நீதிமன்ற ஆணையின்படி, இந்த வழக்கில், இயக்குநர் ஷங்கர் தரப்பில் நேற்று (மே 11) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பல உண்மைத் தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர். முதலில் இந்தப் படத்தை தில் ராஜு என்பவர் தயாரிக்க முன்வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்ததாகவும் கூறியுள்ளார். கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

படத்தைத் தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என்று பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை ரூ.250 கோடியாகக் குறைத்தும், படப்பிடிப்பைத் தொடங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது ஷங்கர் புகார் தெரிவித்துள்ளார்.

தில் ராஜு படத்தைத் தயாரித்திருந்தால் படம் ஏற்கெனவே வெளியாகியிருக்கும் எனவும், அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும், நடிகர் கமலுக்கு 'மேக் அப்' அலர்ஜி ஏற்பட்டதால், படப்பிடிப்பு தாமதமானதாகவும், அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் இதுதவிர, படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

படத் தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்குத் தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகக் கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டுக் காலத்தை வீணடித்தது லைகா நிறுவனம்தான் எனவும், இந்தக் காலத்தில் தான் சும்மா இருக்க முடியாது எனவும் லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் ஷங்கர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இந்தியன் - 2 படத்தில் லைகா நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் வரை முடங்கியுள்ளது. ஷங்கர், கமல்ஹாசன் தரப்புக்கு மூலதன முடக்கம் என்பது எதுவும் இல்லை. அதேபோல் ஷங்கருக்கு அடுத்தடுத்து படங்கள் இயக்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு சொந்தப்படம், அரசியல் வேலைகள் இருக்கிறது. அதனால் இதில் பெரிதும் பாதிப்பை எதிர்கொண்டிருப்பது தயாரிப்பாளர் தரப்பு என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

-இராமானுஜம்

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2021: நான்காவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி!

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

5 நிமிட வாசிப்பு

அண்ணாத்த டீசர் முழுவதும் ரஜினி

புதன் 12 மே 2021