மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 மே 2021

மக்களை சிரிக்க வைத்த நெல்லை சிவா, மாறன் மறைவு!

மக்களை சிரிக்க வைத்த நெல்லை சிவா, மாறன் மறைவு!

பிரசன்னா, உதயஶ்ரீ, வடிவேலு, சந்தானம், விஜயகுமார், ராஜேஷ், அல்வா வாசு ஆகியோர் நடிப்பில் தினா இசையில், மாரிமுத்து இயக்கத்தில் 2008 மார்ச் 21 அன்று வெளியான படம் ‘கண்ணும் கண்ணும்[. வர்த்தக ரீதியாக தோல்வியடைந்த படம்.

ஆனால் இந்தப் படத்தில் சில நிமிடங்களே வரும் காட்சி ஒன்று இன்றளவும் அரசியல், சமூகம் என அனைத்து மட்டங்களிலும் உதாரணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வடிவேலுவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த முதல் பத்து காமெடி காட்சிகள் இடம்பெற்ற படங்களில் கண்ணும் கண்ணும் படமும் ஒன்று.

“கிணத்தைக் காணோம்னு ஒரு கம்ப்ளெய்ன்ட்டாப்பா... இனி இவன் இருக்கிற ஊர்ல நான் இருக்கவே மாட்டேன்’' என வடிவேலுவுடன் கோபித்துக் கொண்டு போலீஸ் வேலையை உதறிவிட்டுச் செல்லும் காட்சிக்கு திரையரங்குகளில் அரங்கம் அதிர கைதட்டல் இருந்தது.

அந்த காட்சிக்கு வடிவேலுவுடன் இணைந்து உயிர் கொடுத்தவர் நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. 60 வயதான இவர் நேற்றைய(11.05.2021)தினம் மாரடைப்பால் காலமானார்.

திருமணமாகாத சிவா தொழில் நிமித்தமாக சென்னையில் இருக்கும்போது சென்னை தமிழையும், நெல்லை தமிழையும் ஒரே நேரத்தில் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பாராம் வடிவேலு.

நெல்லை பேச்சுவழக்கை சினிமாவில் கொண்டுவந்து ரசிக்கவைத்த நெல்லை சிவா சமீபகாலமாக டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், கலர்ஸ் தொலைக்காட்சியில் தமிழின் சில்லுனு ஒரு காதல் என இரண்டு தொடர்களிலும் இவருடைய நடிப்புக்குத் தனி ரசிகர்கள் உண்டு.

இரு தினங்களுக்கு முன் ’சில்லுனு ஒரு காதல்’ தொடரில் நடித்ததுதான் இவருடைய கடைசி ஷூட்டிங். மே 10 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றவர் மாலை வரை நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

சற்று சோர்வாக இருப்பதை உணர்ந்து உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு காரணமாக காலமானார்.

நெல்லை சிவா கடைசியாக நடித்த ஷூட்டிங்கில் அவருடன் நடித்த நகைச்சுவை நடிகர் மதுரை முத்து கூறியதாவது, "ரெண்டு பேருமே ஊரை அடைமொழியா வச்சுப் பிரபல மடைஞ்சவங்கிறதால எங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துல பார்க்கிறவங்க அதைச் சொல்லிக் கலாய்ப்பாங்க.

ஏற்கெனவே எனக்கு நல்ல அறிமுகம்னாலும், இந்த சீரியல்ல மூணு வாரத்துக்கு முன்னாடிதான் எங்க ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன் வந்தது. ஆனா, இந்தப் பத்துப் பதினைஞ்சு நாள்லயும் நாங்க பேசிக்கிட்டது என்னவோ நிறைய.

பொதுவா வடிவேலு அண்ணன் டீம்ல இருந்தவங்க பக்கத்துல உட்கார்ந்தோம்னா நிறையக் கதைகள் இருக்கும். பட அனுபவங்களைத் தாண்டி அவங்கவங்க பர்சனல் விஷயங்கள்ல நிறைய சம்பவங்கள் இருக்கும். அடிபட்டு, மிதிபட்டு வந்த கதைகள்லாம் கேக்கறப்ப சில நேரம் கண் கலங்கிடும்.

இவர்கிட்டயும் அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு. தன்னுடைய மூதாதையர்கள் சுதந்திரப் போராட்டத்துல கலந்து ஜெயிலுக்குப் போனது பத்திச் சொன்னார்.

அடிப்படையில சிவாஜி ரசிகர். சிவா, சினிமாவுல முன்னேறி வந்த காலங்கள்ல பட்ட அவமானங்கள் பற்றி நிறைய கதைகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய ஸ்லாங் நல்லா ஃபேமஸ் ஆனதைப் பொறுக்கமாட்டாத சிலர், அவருக்கு டயலாக்கைக் குறைச்சிருக்காங்க. அப்பல்லாம் ‘ஏய்யா சாமிகளா... எனக்கு சினிமாவைத் தவிர வேறெந்த வேலையும் தெரியாது,

நான் யார் பொழப்பையும் கெடுக்க மாட்டேன். என் பொழப்புல நீங்களும் கைவைக்கா தீங்கப்பானு சொல்வாராம். எப்படியோ அடிச்சுப் புடிச்சு முன்னேறி சுமார் 500 படங்களுக்கு மேல நடிச்சுட்டார்.

படப்பிடிப்பு இடைவேளையில் வீரபாண்டியக் கட்டபொம்மன் பேசற வசனத்தை அவர் திருநெல்வேலி ஸ்லாங்லயும், நான் மதுரை ஸ்லாங்லயும் பேசி கூட்டத்தைச் சிரிக்க வெச்சோம் என்றார்.

நெல்லை சிவா மரணம் பற்றி இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் என்னுடைய பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவரின் நெல்லை தமிழ் அழகு, கட்டபொம்மனின் முழு வசனத்தையும் நெல்லைத் தமிழில் பேசி என் சிந்தனைகளை வேறுபக்கம் யோசிக்க வைத்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை சிவா போன்றே குணச்சித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் துணை நடிகர் மாறன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் நடிகர் மாறன். அதனை தொடர்ந்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களை மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.

-இராமானுஜம்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

புதன் 12 மே 2021