மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

தனிமைப்படுத்தப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

தனிமைப்படுத்தப்படும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டி பாதி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை மொத்தம் 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் அடுத்த (ஜூன்) மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம்தேதி வரை நடக்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி அங்கு இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது. இவ்விரு போட்டிகளுக்கான விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. நான்கு மாற்று வீரர்களும் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் போட்டி நடைபெற இருப்பதால் வீரர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், “இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பாக வருகிற 25ஆம் தேதி முதல் இந்திய வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் (பயோ-பபுள்) இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் அவர்கள் எட்டு நாட்கள் கடுமையாக தனிமைப்படுத்தப்படுவார்கள். ஹோட்டல் அறையிலேயே முடங்கி இருக்க வேண்டியது இருக்கும். தனிமைப்படுத்துதலின்போது மூன்று நாட்கள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

அதன் பிறகு ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள். அங்கு சென்றதும் நமது வீரர்கள் மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏற்கனவே இந்தியாவில் தனிமைப்படுத்துதலில் இருந்துவிட்டு தனி விமானத்தில் பயணித்து உடனடியாக மற்றொரு பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவதால் இந்த முறை பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அடிக்கடி கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்து, அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க ஒரு மாதக் கால இடைவெளி இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வீரர்கள் வெளியே சுற்ற முடியாது. அதேநேரம் இது நீண்ட தொடர் என்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்லலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே வீரர்கள் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இரண்டாவது டோஸ் போடுவதில்தான் கேள்வி எழுகிறது. ஏனெனில் அந்த நேரத்தில் வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள்.

எனவே வீரர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்துவதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம். ஒருவேளை இங்கிலாந்து அரசு தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்காவிட்டால், இந்தியாவில் இருந்து இரண்டாவது டோஸ் பெற்றுக்கொள்வோம்.

இந்தத் தொடருக்காக இந்திய அணியில் ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யாரும் காயம் அடையாதவரை எந்த பிரச்சினையும் இல்லை. இதை கவனத்தில் கொண்டுதான் மாற்று வீரர்களாக இடம்பெற்றுள்ள நான்கு வீரர்களில் மூன்று பேர் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு தயார்நிலையில் இருப்பார்கள். தேவைப்பட்டால் பிரதான அணிக்கு அவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்றும் கூறியுள்ளார்.

-ராஜ்

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

4 நிமிட வாசிப்பு

விஜய்யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸை நிராகரித்த நடிகர்

கமல் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

3 நிமிட வாசிப்பு

கமல்  படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம்!

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

4 நிமிட வாசிப்பு

விஜய்யை கடுப்பேற்றிய சம்பவம்!

திங்கள் 10 மே 2021