?விஷால் கனவு நிறைவேறுமா?

entertainment

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்ற கட்சியின் தலைவரை சினிமா பிரபலங்கள் நேரில் சென்று சந்திப்பதில்லை. தங்கள் தொழில்சார்ந்த பிரச்சினைகளுக்காக எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தயக்கம் இன்றி முன்னணி நடிகர் முதல் கடைகோடி சினிமா தொழிலாளி வரை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அல்லது முதல்வர்களைச் சந்தித்து விடுவார்கள்.

கடந்த ஒரு வருடக் காலமாக கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டு செயல் இழந்து இருந்த திரையுலகம் மீண்டும் வெற்றி நடைபயில கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்களை முன்னணி நடிகர்கள் நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என உரிமையுடன் பேசினார்கள்.

இதற்கு நேர் எதிராக இருந்தது தமிழகத் திரைத்துறை. கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த், கட்சி தொடங்கிய கமல்ஹாசன், திரை இயக்குநர் என்கிற பிரபலத் தன்மையுடன் கட்சி நடத்திவரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என எல்லோரும் மௌனமாகவே இருந்தார்கள்.

தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பல கட்ட முயற்சிகளுக்குப் பின் படப்பிடிப்பு நடத்தவும், தியேட்டர்களை திறக்கவும் அனுமதி கிடைத்தது. 2021இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையில் புதிய அரசு அமையும் என்பது உறுதியானது. திரையுலகத்தின் கவனமும், ஆதரவும் ஒரே நாளில் திமுக பக்கம் ஒட்டுமொத்தமாக மாறியது.

நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறி கிடக்கும் தயாரிப்பாளர்கள் கொரோனா காலத்தில் புதிய சங்கங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், தொழிலை மேம்படுத்த அல்லது அடுத்தகட்ட நகர்வுகளைப் பற்றி முடிவு எடுத்து அமல்படுத்தக்கூடிய சக்திமிக்க அமைப்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு இல்லை என்பதே இன்றைய நிலைமை.

அதனால், தற்போது அமைந்துள்ள புதிய அரசு எந்த ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை என்றே தெரிகிறது. சினிமாவின் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய மற்றோர் அமைப்பு தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த அமைப்புக்கு 2019 ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. வாக்குரிமை மறுக்கப்பட்ட சில உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சங்கம் எந்த செயல்பாடும் இன்றி முடங்கியுள்ளது. அதன் காரணமாகப் பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்படாமல் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது. சங்கத்தின் மூலமாக உறுப்பினர்களுக்குக் கிடைத்து வந்த பணப்பயன்கள் கிடைக்கவில்லை. தற்போது ஆட்சி மாறியுள்ளதால் விஷாலுக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக ஆதரவு அணி எனக் கூறப்பட்ட ஐசரி கணேஷ் தலைமையிலான அணி பலவீனமாக உள்ளது. இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் விஷால் தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களில் வெற்றி பெற்றபோது திரைத்துறை சார்பில் இப்போது போன்று யாரும் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தார். தொழில்ரீதியாகச் சிக்கல் வரும் என பயந்தனர். ஆனால், நடிகர் விஷால் அப்போது ஸ்டாலினை நேரில் சந்தித்து வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று முதல்வர் ஸ்டாலினை தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறியுள்ளார். இதனால் கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல், மருந்து வாங்ககூட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.

“இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்துக் கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு நடிகர் சங்க தேக்க நிலையைப் போக்குவதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்பாகச் செய்து தருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாகவும், அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார்.

அத்தோடு முதன்முதலாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்” என்று விஷால் வெளியிட்டுள்ள பத்திரிகைகளுக்கான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகத்தை விஷால் தலைமையிலான அணி மீண்டும் தன் வசப்படுத்துவதற்கான அரசியல் ரீதியான நகர்வுகளை தொடங்கியுள்ளது. இந்த அணியை வழிநடத்துபவரான பூச்சி முருகன் திமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *