மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

இந்தியன் -2 விடுதலையாகுமா?

இந்தியன் -2 விடுதலையாகுமா?

தமிழ் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்வதற்காக லண்டனில் லைகா எனும் பெயரில் மொபைல் தொழில் செய்துவந்த யாழ்ப்பாண தமிழரான சுபாஷ்கரனை அழைத்து வந்தவர் மற்றொரு இலங்கைத் தமிழரான கருணாமூர்த்தி.

தமிழ் படங்களின் வெளிநாட்டு உரிமைகளை வாங்கும் வினியோகஸ்தராக இருந்த லண்டன் கருணாவும் லைகா சுபாஷ்கரனும் இணைந்து தயாரித்த முதல் படம் கத்தி. விஜய், சமந்தா நடிப்பில் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் 2014 அக்டோபர் 22 தீபாவளி அன்று வெளியானது. தமிழில் கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம், வட சென்னை, 2.0, தர்பார் என குறிப்பிடத்தக்க படங்களைத் தயாரித்திருந்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு .

2.0 படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஷங்கர் இயக்கும் படம் மூலம் ஈடுகட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் கமல் நடிக்கும், இந்தியன்-2 படம் தொடங்கப்பட்டது. ஆனால் தொடக்கம் முதலே இந்தியன்-2 பல்வேறு சிரமங்களையும், நெருக்கடிகளையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்படுத்தியிருப்பதை ஏற்கனவே பல கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறோம்.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இந்தியன் 2 இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த வருடம் ஏற்பட்ட கிரேன் விபத்து, அதனால் ஏற்பட்ட உயிர் இழப்பு காரணங்களால் உடனடியாக தொடங்க முடியவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஒரு வருடகாலமாகப் படப்பிடிப்புகளை நடத்த இயலவில்லை. ஆனால், அதற்குப் பிறகும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகாமல் இழுத்துக் கொண்டே போனது.

இதன் காரணமாகத் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க ஷங்கர் ஒப்பந்தமானார். அதனால் இந்தியன் - 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களில் அவர் பணியாற்றக் கூடாது என லைகா இயக்குநர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.

நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இருவரும் பேசியும் தீர்வு வரவில்லை. இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்து தனது சினிமா பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க கமல் முடிவெடுத்துள்ளார். ஏற்கெனவே 'விக்ரம்' படத்தை அறிவித்துவிட்டாலும், 'இந்தியன்2' படத்தை முடிக்காமல் போனால் தன்னையும் லைகா கோர்ட்டுக்கு இழுக்க கூடிய அபாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பை முடித்துகொடுத்து

விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

கமல்ஹாசனே லைகா - ஷங்கர் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருப்பதால் சம்பளம், செலவு கணக்கு இவற்றில் இருதரப்பும் விட்டு கொடுக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்து படப்பிடிப்பு நடத்தக்கூடிய சூழல் ஏற்படும்போது இந்தியன் - 2 படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடத்தி முடிப்பதற்கான சூழல் ஏற்படும் என்கின்றனர்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 9 மே 2021