மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 மே 2021

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப சினிமா தயாரிப்பு, விநியோகம், வியாபாரம், திரையிடல் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. தொலைக்காட்சியும், கைபேசியும் அறிமுகமாவதற்கு முன்பு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, அந்தப் படத்தின் வியாபாரத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்தது.

திரைப்படங்களின் பாடல்களை இசைதட்டு, அதைத் தொடர்ந்து ஆடியோ கேசட், வானொலி மூலமாக மட்டுமே ரசிகர்கள் கேட்க முடியும் என்கிற சூழல் இருந்தபோது படத்தின் ஆடியோ உரிமை கௌரவமான விலைக்கு வியாபாரமானது.

தனியார் தொலைக்காட்சி, தனியார் வானொலி, கைபேசி மக்கள் மனங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பின், புதிய படங்களின் பாடல்கள் காட்சி வடிவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதன் காரணமாக படத்தின் வியாபாரம் அதிகரிக்கவில்லை. ஆனால், தனியார் தொலைக்காட்சிகள், தனியார் வானொலி நிலையங்களின் வருமானம் அதிகரித்தது. ஆடியோ வெளியீட்டுக்கான முக்கியத்துவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதையும், அதை என்றைக்கு, எத்தனை மணிக்கு அறிவிக்கப் போகிறோம் என்பதும் ஒரு நிகழ்ச்சியாக மாறிப்போனது. அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் பெயர் அறிவிப்பு, பின்னர் படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் யார் யார் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி தற்போது கோடம்பாக்க சினிமாவில் கௌரவமாகப் மாறிப்போனது. இந்த நிகழ்ச்சிகள் படம் சம்பந்தபட்டவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், சினிமா ரசிகனுக்கு எரிச்சலையே ஏற்படுத்துகிறது என்பதை கோடம்பாக்க சினிமா புரிந்துகொள்ளவில்லை.

அதிகரித்துபோன தமிழ் தொலைக்காட்சிகளின் செய்தி தேவைக்குத் திரைப்பட துறையின் அன்றாட நிகழ்ச்சிகள், வேலைகள்கூட 'பிரேக்கிங்' செய்தியில் இடம் பெறுகிறது.

இவையெல்லாம் அருதப்பழசாகி போனது, சினிமா ரசிகனுக்கு அலுத்துப் போனது. அவர்களுக்கு சினிமாவின் மீது ஈர்ப்பு ஏற்பட புதிய வழிகளை முயற்சி செய்ய தொடங்கியிருக்கிறது 'துக்ளக் தர்பார்' படக்குழு. டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார். பாடல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பொதுவெளியில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த முடியாது. படம் OTTயில் வெளியாகப் போகிறது. ஆடியோ வெளியீட்டையும் ஓடிடியில் நடத்திவிட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதனால், தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக இந்தப் படத்தின் பாடல்களை நேரடியாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியிட இருக்கிறார்களாம். பாடலின் ஒலிப்பதிவை மட்டும் வெளியிடலாமா அல்லது படமாக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகளையே வெளியிடலாமா என்கிற ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்பதைப் போல தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 'துக்ளக் தர்பார்' படத்தின் பாடல்கள், இணையத்தில் வெளியாவது மட்டும் உறுதி என்கிறார்கள்.

-இராமானுஜம்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 9 மே 2021