மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 மே 2021

இப்ராஹிம் மறைவு: டி.ராஜேந்தர் உருக்கம்!

இப்ராஹிம் மறைவு: டி.ராஜேந்தர் உருக்கம்!

இயக்குநர் டி.ராஜேந்தரை, இயக்குநராக 'ஒருதலை ராகம்' படத்தில் அறிமுகம் செய்த, தயாரிப்பாளர் இப்ராஹிம் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் டி.ராஜேந்தர் 'ஒருதலை ராகம்' படத்தின் கதையை கையில் வைத்துக்கொண்டு, தயாரிப்பாளரைத் தேடி அலையாத இடங்கள் இல்லை. ஏறி இறங்காத தயாரிப்பு கம்பெனிகள் இல்லை. இவரை நம்பி பணம் போட தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், மயிலாடுதுறை அருகே உள்ள வடகரையில் உள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வசதி படைத்தவரான இப்ராஹிம், டி.ராஜேந்தருக்கு அறிமுகமானார்.

டி.ராஜேந்தர் கூறிய கதை பிடித்து போனதால், 'ஒருதலை ராகம்' படத்தைத் தயாரிக்கவும் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் சில நிபந்தனைகளும் டி.ராஜேந்தருக்கு விதிக்கப்பட்டது. கதை, திரைக்கதை, வசனம், இசை போன்ற பணிகளை டி.ராஜேந்தர், செய்தாலும் படத்தை நான்தான் இயக்குவேன் என்றார் இம்ராஹிம். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார் டி.ராஜேந்தர்.

ஆனால் சினிமாவில் எவ்வித அனுபவமும் இல்லாததால், இம்ராஹிம்மால் படத்தை இயக்க முடியவில்லை. அதனால் படத்தை நான் இயக்கி தருகிறேன், நீங்கள் உங்கள் பெயரைப் போட்டு கொள்ளுங்கள் என கூறி, டி.ராஜேந்தர் படத்தை இயக்கி முடித்தார்.

அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைவதற்குள், தயாரிப்பாளர் மற்றும் டி.ராஜேந்தருக்கு இடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. எனவே ஓர் ஓரமாக டி.ராஜேந்தர் பெயர் படத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், படம் தயாரிக்க... வாய்ப்பு இல்லாமல் தேடி அலைந்தபோது... தனக்கு வாழ்வளித்த இப்ராஹிமை என்றும் நன்றியுடன் நினைத்து பார்ப்பதாக கூறுவார் டி.ராஜேந்தர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த இ.எம்.இப்ராஹிம், இறந்த தகவலை அறிந்த டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார் .

அதில், "1980ஆம் ஆண்டு வெளியான என் முதல் படமான 'ஒரு தலை ராகம்' படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன். காரணம், அவர் அரங்கக்குடியில் பிறந்தவர் என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர். வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர் என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர். இன்று ஏன் மறைந்தார், இந்த உலகை விட்டு பிரிந்தார், கண்ணீர் கண்களை நனைக்கிறது. என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைக் கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்

-இராமானுஜம்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

வெள்ளி 7 மே 2021