மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

சன் தொலைக்காட்சியும் - துக்ளக் தர்பார் படமும்!

சன் தொலைக்காட்சியும் - துக்ளக் தர்பார் படமும்!

விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீன தயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தைத் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்த வருட தொடக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி தந்த மாஸ்டர் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான இவர், தற்போது விக்ரம், துருவ் விக்ரம் நடித்து வரும் படங்களைத் தயாரித்து வருகிறார். துக்ளக் தர்பார் படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என நீண்ட காலமாகத் தகவல்கள் கசிந்தது. அப்போதெல்லாம் இத்தகவலைத் தயாரிப்புத் தரப்பில் உடனடியாக மறுத்துவிடுவார்கள்.

கொரோனா இரண்டாம் பரவல் காரணமாகத் திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளைத் தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தமிழ் சினிமாவுக்கு எந்தளவுக்கு நன்மைகளை வழங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு திரைத் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், தயாராகி வெளியீட்டுக்குக் காத்திருக்கும் சில படங்களுக்கு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அவற்றில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படமும் ஒன்று.

இப்படம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது, இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லி ஒப்பந்தம் போட்டார்களாம்.

இப்போது திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவெடுத்திருப்பதால் ஒப்பந்தப்படி சன்தொலைக்காட்சியிடம் தடையில்லா சான்று பெறவேண்டும்.

திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காலங்களில் கூட தமிழ் சினிமாவில் சன் தொலைக்காட்சி விரும்பியது நடக்கும். அதற்கான கட்டமைப்புகளை சன் நிர்வாகம் தமிழ் திரையுலகில் உருவாக்கி அதனைத் தொடர்ந்து பராமரித்துப் பாதுகாத்து வந்தது. தற்போதைய அரசியல் ஆட்சி மாற்றம் சன் தொலைக்காட்சியை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது.

ஆளும் திமுக தலைமை முந்தைய காலங்களைப் போன்று சன் நிர்வாக ஆதிக்கத்தை அனுமதிக்கப்போகிறதா அல்லது நியாயமாக நடந்து கொள்ளப்போகிறதா என்பதற்கான தெளிவு கிடைக்க சில மாதங்கள் ஆகலாம்

இதன் காரணமாக சன் தொலைக்காட்சிக்கு புதிய படங்களின் ஒளிபரப்பு உரிமையை விற்பனை செய்த தயாரிப்பாளர்கள் அவர்களுடன் கறாரான போக்கை மேற்கொள்ள முடியாது அவர்கள் கூறுகிறபடி கேட்டு நடக்க வேண்டிய சூழல் உள்ளது. "துக்ளக் தர்பார்" படத்தின் தயாரிப்பாளருக்கும் இதுதான் நிலைமை இதுவரை ஓடிடிக்கு படத்தை வியாபாரம் செய்வதற்கான கீரின் சிக்னலுக்காக தயாரிப்பு தரப்பு காத்திருப்பதால் துக்ளக் தர்பார் ஒளிபரப்பு தாமதமாகிறது என்கிறது தமிழ் சினிமா வணிக வட்டாரங்கள்.

-இராமானுஜம்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

வியாழன் 6 மே 2021