மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

என்னென்ன படங்கள், எப்போது ரிலீஸ்? மார்வெல் கொடுத்த முழு அப்டேட்!

என்னென்ன படங்கள், எப்போது ரிலீஸ்? மார்வெல் கொடுத்த முழு அப்டேட்!

மார்வெல் ஸ்டூடியோஸ் என்று சொன்னதுமே நமக்கு நினைவுக்கு வருவது சூப்பர் ஹீரோக்கள்தான். அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், ஹல்க், ப்ளாக் பந்தர் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். கடைசியாக மார்வெல் படைப்பாக வெளியான அவெஞ்சர் எண்ட் கேம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும், அடுத்து இந்தக் கதை எப்படி நகரப்போகிறது எனும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றது.

எண்ட் கேம் வெளியாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. மார்வெலிடமிருந்து அடுத்தடுத்து வாண்டா விஷன், தி ஃபால்கன் அண்ட் தி வின்ட்டர் சோல்சர் என இரண்டு சீரிஸ்களும் வெளியாகிவிட்டன. இந்த சீரிஸ்களைத் தொடர்ந்து அடுக்கடுக்காக மார்வெல் திரைப்படங்களும் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. அந்த லிஸ்டில் ப்ளாக் விடோ திரைப்படம் சென்ற வருடமே வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. அதனால், மார்வெலின் மற்றப் படங்களின் ரிலீஸும் அடுத்தடுத்து தள்ளிப் போயின. ப்ளாக் விடோ படத்தை விட்டு விட்டு, மற்ற படங்களை ரிலீஸ் செய்யலாமே... ஏன் தள்ளிப் போனது என்று கேள்வி எழலாம். அதற்கு காரணம் இருக்கிறது.

மார்வெல் ஒரு டைம் லைனை சரியாகப் பின்தொடர்ந்து வருகிறது. அந்த டைம் லைனை மிஸ் செய்துவிட்டால், தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனம் சந்திக்கும் பிரச்சினைகள் மார்வெல் படங்களிலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்தையும் மனதில் கொண்டே ஒவ்வொரு படத்தையும் தயார் செய்துவருகிறது. அந்த டைம் லைனில் மாற்றம் வந்துவிடக் கூடாது என்பதற்காக வரிசையைக் குழப்பிவிடாமல் ஒன்றன்பின் ஒன்றாகப் படங்களை வரிசைப்படுத்தி வெளியிடுகிறது. அதனால், மார்வெலின் அடுத்த ரிலீஸாக நிச்சயம் ப்ளாக் விடோ இருக்கும்.

தற்போது, ‘மார்வெல் ஸ்டூடியோஸ் செலிபிரேட் தி மூவீஸ்’ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், மார்வெலின் பழைய திரைப்படங்களை நினைவுப்படுத்தும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது. அதோடு, மார்வெலின் அடுத்தடுத்த ரிலீஸ் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல் ரிலீஸாக ஸ்கார்லெட் ஜோன்சன் லீட் ரோலில் நடித்திருக்கும் ‘ப்ளாக் விடோ’ வரும் ஜூலை 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்து ‘ஷாங்க் ஷி அண்ட் தி லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்’ படம் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது. மூன்றாவது ரிலீஸாக மார்வெல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பு காத்திருக்கும் ‘இடர்னல்ஸ்’ நவம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த வருட கடைசி ரிலீஸாக டிசம்பர் 17ஆம் தேதி ‘ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்’ படம் வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து, 2022ஆம் ஆண்டுக்கான முதல் ரிலீஸாக மார்ச் 25ஆம் தேதி ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ்’ படம் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து, மே 6ஆம் தேதி ‘தோர் லவ் அண்ட் தண்டர்’, ஜூலை 8ஆம் தேதி ‘ப்ளாக் பந்தர் வகண்டா ஃபாரெவர்’, நவம்பர் 11ஆம் தேதி கேப்டன் மார்வெல் படத்தின் இரண்டாம் பாகமான ‘தி மார்வெல்ஸ்’ என அடுத்த வருடம் நான்கு படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது மார்வெல்.

2023ஆம் ஆண்டில் ‘அண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் க்வாண்டோமனியா’ படத்தை பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மார்வெல் படங்களில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ‘கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி வால்யும் 3’ படமானது 2023, மே 5ஆம் தேதி வெளியாகும். இந்தப் படங்களோடு மார்வெலின் Phase 4 திரைப்படங்கள் முடிகிறது.

இந்தப் படங்களுக்கு இடையில் லோகி, கேப்டன் அமெரிக்கா அண்ட் தி வின்ட்டர் சோல்சர் மாதிரியான வெப் சீரிஸ்களும் நடுநடுவே வெளியாகி மார்வெல் ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கிறது.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வியாழன் 6 மே 2021