மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

14ஆவது ஐபிஎல் தொடருமா?

14ஆவது ஐபிஎல் தொடருமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று (மே 3) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. கொல்கத்தா அணி வீரர்களைத் தொடர்ந்து சென்னை அணியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஆட்டத்துக்கு இடையில் 14ஆவது ஐபிஎல் ஆட்டங்கள் தொடர்ந்து நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் நடுவே இவ்வளவு நாட்களாக தடங்கல் இல்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டிகளுக்கு நேற்று (மே 3) பிரச்சினை ஏற்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நேற்று இரவு அகமதாபாத்தில் போட்டி நடைபெற இருந்தது.

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது. இதனால் நேற்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்தில் தோளில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வருண் சக்ரவர்த்தி பயோ பபுளைவிட்டு மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. மருத்துவமனை மூலம் அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்றும் வருண், சந்தீப்பைத் தவிர வேறு யாருக்கும் கொல்கத்தா அணியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் இடம்பெற்றிருக்கும் சிஇஓ காசி விஸ்வநாதன், பெளலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மற்றும் சென்னை அணி பஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் தங்கியிருக்கும் சென்னை அணி, இதனால் பயிற்சிகளை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாளை (மே 5) டெல்லியில் சென்னை அணியுடன் ராஜஸ்தான் அணி விளையாட இருக்கும் நிலையில், நேற்று (மே 3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருந்த போட்டியைப்போல் இதுவும் ஒத்திவைக்கப்படுமா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால், இன்று (மே 4) இரவு நடைபெற உள்ள பெங்களூரு – மும்பை அணியின் ஆட்டம் குறித்து ஐபிஎல் அறிவிப்பில் எந்த மாற்றமும் குறிப்பிடப்படவில்லை.

சென்னை மற்றும் மும்பையிலேயே முதல் மூன்று வார போட்டிகள் நடந்த நிலையில் அடுத்தக்கட்டமாக டெல்லி, அகமதாபாத் எனப் போட்டி நடக்கும் நகரங்கள் மாறியதும் கொரோனா தொற்று, பயோ பபுளுக்குள்ளும் நுழைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மே 8ஆம் தேதிவரை டெல்லி மற்றும் அகமதாபாத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கொரோனா பரவல் செய்திகள் ஐபிஎல் ஆட்டங்கள் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீகில் இதேபோன்று வீரர்களுக்கு கொரோனா பரவியதால் தொடரே பாதியில் நிறுத்தப்பட்டது. அதுபோல் ஐபிஎல் தொடரும் நிறுத்தப்படலாம் என்கிற செய்திகள் இப்போது பரவ ஆரம்பித்திருக்கின்றன.

ரசிகர்களே இல்லாமல் அனைத்து ஆட்டங்களும் நடைபெற்றுவந்தாலும், இதுவரை அதிகாரபூர்வமாக பிசிசிஐ, ஐபிஎல் போட்டி தொடர்பாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

-ராஜ்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

செவ்வாய் 4 மே 2021