மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தி, டெல்லியின் ஆறாவது வெற்றி!

ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தி, டெல்லியின் ஆறாவது வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி, டெல்லி அணி ஆறாவது வெற்றியைப் பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (மே 2) இரவு அகமதாபாத்தில் அரங்கேறிய 29ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் கேப்டன் பதவியை ஏற்றார். இதேபோல் நிகோலஸ் பூரனுக்குப் பதிலாக டேவிட் மலான் இடம் பெற்றார்.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆட, இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. பிரப்சிம்ரன் சிங் 12 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும், டேவிட் மலான் 26 ரன்னிலும், தீபக் ஹூடா ஒரு ரன்னிலும், ஷாருக்கான் 4 ரன்னிலும் வெளியேறினர்.

இதற்கு மத்தியில் மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ரபடா, இஷாந்த் ஷர்மாவின் ஓவர்களில் சிக்சர் அடித்த மயங்க் அகர்வால், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் வீசிய இறுதி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். இதனால் பஞ்சாப் அணி 160 ரன்களை தாண்டி கவுரவமான நிலையை அடைந்தது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் 99 ரன்களுடனும் (58 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐபிஎல்லில் ஒரு வீரர் 99 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருப்பது இது மூன்றாவது முறையாகும்.

டெல்லி தரப்பில் ரபடா மூன்று விக்கெட்டுகளும், அவேஷ்கான், அக்‌ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்தது. ஷிகர் தவான் 69 ரன்களுடனும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 16 ரன்களுடனும் (4 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

முன்னதாக பிரித்வி ஷா 39 ரன்களும், ஸ்டீவன் சுமித் 24 ரன்களும், கேப்டன் ரிஷாப் பண்ட் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

8ஆவது லீக்கில் ஆடிய டெல்லி அணிக்கு இது ஆறாவது வெற்றியாகும். அத்துடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும்.

இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

-ராஜ்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

திங்கள் 3 மே 2021