மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

ஐபிஎல்: 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்ற ராஜஸ்தான்!

ஐபிஎல்: 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்ற ராஜஸ்தான்!

ஐபிஎல் 14ஆவது தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 28ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (மே 2) நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 12 ரன்களுடன் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இதில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் 4 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்டார். 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கரின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி, சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தைத் தவறவிட்டார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர், 56 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். நிலைத்து நின்று ஆடிய அவர், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மொத்தம் 64 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர், 19ஆவது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் போல்டு ஆனார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனீஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.

மனீஷ் பாண்டே 20 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில், போல்டு ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுமுனையில் ஜானி பேர்ஸ்டோ 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து கேன் வில்லியம்சன் 20 ரன்களிலும், விஜய் சங்கர் 8 ரன்களிலும், கேதர் ஜாதவ் 19 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அணியின் ரன் ரேட் கணிசமாக குறைந்தது. அடுத்து வந்தவர்களும் நிலைத்து நின்று ஆடாததால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதுவரை இந்த இரு அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளன. ராஜஸ்தான் அணி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி ஆறாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

-ராஜ்

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

23 நிமிட வாசிப்பு

மத மாற்ற விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ருத்ர தாண்டவம்’!

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

4 நிமிட வாசிப்பு

ஃப்ளைட்டில் ஃபைல்: அப்டேட் குமாரு

திங்கள் 3 மே 2021