மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி வெற்றி!

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 29) இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத்தில் நடந்த 25ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ரானா டெல்லி வீரர் அக்சர் படேல் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 19 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயன் மோர்கன் (0) ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சுனில் நரைனும் (0) ரன் எதுவும் எடுக்காமல் லலித் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய ஆண்ரே ரசல், தொடக்க வீரர் சுக்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளை சந்தித்த சுக்மன் கில் 43 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதிரடியாக ஆடிய ஆண்ரே ரசல் டெல்லி பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தார். 27 பந்துகளை சந்தித்த ரசல் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 45 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் அக்சர் படேல், லலித் யாதவ் அதிகபட்சமாக தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இரு வீரர்களுமே கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

ஷிகர் தவான் சற்று நிதானமாக ஆடிய போதும் மறுமுனையில் பிரித்வி ஷா ருத்ர தாண்டவம் ஆடினார். பிரித்வி ஷா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் 47 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 46 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் கொல்கத்தா வீரர் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 41 பந்துகளில் 3 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் குவித்து பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரிஷப் பண்ட்டும் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

இறுதியில் டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி தரப்பில் அந்த அணியின் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் விளையாடி ஐந்து வெற்றி, இரண்டு தோல்விகளுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஐந்து தோல்விகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இன்று (ஏப்ரல் 30) இதே மைதானத்தில் நடக்கும் 26ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

-ராஜ்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

வெள்ளி 30 ஏப் 2021