மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

ஐபிஎல்: டெல்லியை ஒரு ரன்னில் வீழ்த்திய பெங்களூரு!

ஐபிஎல்: டெல்லியை ஒரு ரன்னில் வீழ்த்திய பெங்களூரு!

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

அகமதாபாத்தில் நேற்று (ஏப்ரல் 27) இரவு நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டெல்லி அணியில் அஷ்வின் விலகிவிட்டதால் அவருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் நவ்தீப் சைனி, டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு ரஜத் படிதர், டேனியல் சாம்ஸ் இடம் பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி (12 ரன்) வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கானின் பந்து வீச்சில் போல்டு ஆனார். பந்து பேட்டின் உள்பகுதியில்பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது. 10 ரன்னில் கேட்ச் ஆபத்தில் இருந்து தப்பித்த மற்றொரு தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 17 ரன்னில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 25 ரன்னில் (20 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார்.

60 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை (8.3 ஓவர்) இழந்தபோதிலும் அதன் பிறகு நுழைந்த டிவில்லியர்ஸ் அணியை நிமிர வைத்தார். அவருக்கு ரஜத் படிதர் (31 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தார். தனது 40ஆவது அரை சதத்தை எட்டிய டிவில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டோனிஸ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் மூன்று பிரமாதமான சிக்சர்களைப் பறக்க விட்டு அசத்தினார்.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 75 ரன்களுடனும் (42 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), டேனியல் சாம்ஸ் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதையடுத்து 172 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி ஆடியது.

தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 21 ரன்னும், ஷிகர் தவான் 6 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னும், ஸ்டோய்னிஸ் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார். அவருக்கு ஹெட்மயர் ஒத்துழைப்பு கொடுத்தார்.

கடைசி 4 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 23 பந்தில் அரை சதமடித்தார்.

இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் 53 ரன்களும், பண்ட் அரை சதமடித்து 58 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. இது பெங்களூரு அணிக்கு ஐந்தாவது வெற்றி ஆகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

இன்று (ஏப்ரல் 28) இரவு டெல்லி மைதானத்தில் நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 28 ஏப் 2021