மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

ஐபிஎல்: ஜடேஜாவிடம் பணிந்த ஆர்சிபி!

ஐபிஎல்: ஜடேஜாவிடம் பணிந்த ஆர்சிபி!

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று தளங்களிலும் ஜடேஜா அற்புதமாக விளையாட, ஆர்சிபியை 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்றது.

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இந்த ஜோடி 10ஆவது ஓவரின் முதல் பந்தில் பிரிந்தது. 9.1 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். அவர் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டு பிளிஸ்சிஸ் 40 பந்தில் அரை சதம் அடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 13.5 ஓவரில் 111 ரன்கள் எடுத்திருந்தது. இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் ஹர்சல் படேல் வீழ்த்தினார்.

அதன்பின் சிஎஸ்கேவின் ரன் குவிக்கும் உத்வேகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. ஜடேஜா டக் அவுட்டில் இருந்து தப்பித்து ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து விளையாடினார். அம்பதி ராயுடு 7 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஹர்சல் படேல் பந்தில் வீழந்தார். அப்போது சிஎஸ்கே 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது.

19ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் அடித்தது சிஎஸ்கே. கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார் ஜடேஜா. இதில் மூன்றாவது பந்து நோ பால் ஆனது. அதற்குப்பதிலாக வீசிய பந்திலும் சிக்ஸ் அடித்தார். அத்துடன் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரை சதம் அடித்தார்.

ஐந்தாவது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இதையடுத்து பெங்களூரு அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது. படிக்கல் அதிரடியை வெளிக்காட்ட, விராட் கோலி நிதான ஆட்டத்தைத் தொடங்கினார். ஆர்சிபி 3.1 ஓவரில் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது விராட் கோலி 8 ரன்னிலும் வெளியேறினார்.

மறுமுனையில் விளையாடி படிக்கல் ஷர்துல் தாகூர் வீசிய 5ஆவது ஓவரின் கடைசி பந்தில் 15 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வாஷிங்டன் சுந்தர் (7), மேக்ஸ்வெல் (22), டி வில்லியர்ஸ் (4) ஆகியோர் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழக்க ஆர்சிபி அத்துடன் சரணடைந்தது. இதற்கிடையில் டான் கிறிஸ்டியனை ரன் அவுட் மூலம் வீழ்த்தினார் ஜடேஜா. 10.1 ஓவரில் 83 ரன்களுக்கும் ஆர்சிபி முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் 20 ஓவர் வரை விளையாடி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் அடித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாஹல் 21 பந்தில் 8 ரன்கள் எடுத்தும், முகமது சிராஜ் 14 பந்தில் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஐந்து கடைநிலை வீரர்கள் 60 பந்துகளைச் சந்தித்தனர். சென்னை அணி சார்பில் ஜடேஜா மூன்று விக்கெட்களும் இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற பெங்களுரு அணிக்கு இது முதல் தோல்வியாகும். சென்னை அணியும் பெங்களூரு அணியும் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் சென்னையும் பெங்களூரும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

-ராஜ்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

திங்கள் 26 ஏப் 2021