மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

ஐபிஎல்: இன்று இரண்டு ஆட்டங்கள் - பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?

ஐபிஎல்: இன்று இரண்டு ஆட்டங்கள் - பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று (ஏப்ரல் 25) இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. 3.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கும் தீவிரத்துடன் அந்த அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்குகிறது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது சென்னை மற்றும் மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 25) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 19ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் மும்பையில் நடக்கும் கடைசி போட்டி இதுவாகும்.

தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் படுதோல்வி அடைந்த சென்னை அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தாவை வரிசையாக வீழ்த்தியது. கடந்த ஆண்டு தனது முதல் நான்கு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் மூன்றில் தோல்வியும் கண்ட சென்னை அணி இந்த தடவை அதற்கு நேர்மாறாக முடிவு கண்டு எழுச்சி பெற்று வருகிறது.

முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் குவித்ததும், தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்ததும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ‘பவர்-பிளே’க்குள் 4 விக்கெட்டுகளை சாய்த்ததும் சென்னை அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

பேட்டிங்கில் பிளிஸ்சிஸ், ருதுராஜ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா நல்ல நிலையில் உள்ளனர். பீல்டிங்கில் ரவீந்திர ஜடேஜா பம்பரமாக சுழல்கிறார். பந்து வீச்சில் தீபக் சாஹர், நிகிடி கட்டுக்கோப்புடன் வீசினாலும், ஷர்துல் தாகூர், சாம் கர்ரன் சற்று முன்னேற்றம் கண்டால் சென்னை அணியை வீழ்த்துவது கடினம்.

சென்னைக்கு நிகராக பெங்களூருவும் வலிமைமிக்க அணியாக திகழ்கிறது. இந்த சீசனில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி பெங்களூரு. லீக் சுற்றில் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி கம்பீரமாக வலம் வருகிறது.

அதுவும் முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 178 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்ததும், அதில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசியதும் கவனிக்கத்தக்கது. தேவ்தத் படிக்கல், கேப்டன் விராட் கோலி, மேக்ஸ்வெல் (2 அரை சதத்துடன் 176 ரன்), டிவில்லியர்ஸ் ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். அவர்கள்தான் அணியின் ஆணிவேராக உள்ளனர்.

இவர்களைக் கட்டுப்படுத்துவதை பொறுத்தே எதிரணியின் வெற்றி வாய்ப்பு அமையும். பந்துவீச்சில் முகமது சிராஜ், கைல் ஜாமிசன், ஹர்ஷல் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.

மொத்தத்தில் சரிசம பலத்துடன் மோதும் இவ்விரு அணிகளில் யாருடைய வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை விழப்போகிறது என்பதே இதில் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16இல் சென்னையும், 9இல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் சென்னையில் நடக்கப்போகும் கடைசி ஆட்டம் இதுவாகும்.

முதல் மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகண்டு விமர்சனங்களை சந்தித்த ஹைதராபாத் அணி ஒரு வழியாக பஞ்சாப்பைத் தோற்கடித்து வெற்றிக்கணக்கைத் தொடங்கியது. அதே உத்வேகத்துடன் அந்த அணியினர் களம் காணுவார்கள்.

டெல்லி அணி நான்கு ஆட்டங்களில் ஆடி மூன்று வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியதால் கூடுதல் உற்சாகத்துடன் இறங்குவார்கள்.

இது மெதுவான தன்மை கொண்ட ஆடுகளம் என்பது அறிந்த விஷயம். அதனால் டெல்லி அணியில் அஷ்வின், அமித் மிஸ்ரா, ஹைதராபாத் அணியில் ரஷித்கான் ஆகியோரின் சுழல் ஜாலத்தை எதிர்பார்க்கலாம்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து டெல்லி அணியுடன் இணைந்துள்ள சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேலுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இன்று நடக்கும் இவ்விரு ஆட்டங்களும் முழு ஊரடங்கு நேரத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சிறப்பு ஆட்டங்களாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

-ராஜ்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

3 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ இறுதியில் பேசியது என்ன?

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

4 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவின் மன்மத லீலை!

ஞாயிறு 25 ஏப் 2021