மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

ஐபிஎல்: மும்பையைச் சரிவுக்குக்கொண்டு வந்த பஞ்சாப்!

ஐபிஎல்: மும்பையைச் சரிவுக்குக்கொண்டு வந்த பஞ்சாப்!

ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியைச் சரிவுக்குக்கொண்டு வந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 23) இரவு நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர். டி காக் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் சர்மா உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இஷான் கிஷன் ரன்கள் எடுக்க மிகவும் திணறினார். இருந்தாலும் ரோஹித் சர்மா தாக்குப்பிடித்து விளையாடினார். இஷான் கிஷன் 17 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை அணி 7 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியைச் சரிவில் இருந்து ஓரளவுக்கு மீட்டது. சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.

மறுமுனையில் 40 பந்தில் அரை சதம் அடித்த ரோஹித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

பொல்லார்டு பந்தை நான்கு பக்கங்களும் அடித்து ஆடியும் கடைசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே சேர்க்க இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 131 ரன்களே எடுத்தது. இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொல்லார்டு 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணியில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினர். அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியாக விளையாடினர். 25 ரன்களில் மயங்க் அகர்வால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கே.எல்.ராகுலுடன் கிரிஸ் கெயில் களத்தில் புகுந்தார். இந்த ஜோடியை மும்பை அணியினரால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை. கே.எல்.ராகுல் 60 ரன்களுடனும் கெயில் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க 17.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு அணிகளும் இது வரை ஐந்து ஆட்டங்களில் விளையாடி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்த மும்பை அணி சரிவுக்கு வந்துள்ளது.

இன்று (ஏப்ரல் 24) இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடக்கும் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

-ராஜ்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

சனி 24 ஏப் 2021