மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 20) இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் டி காக் ஒரு ரன்னில் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 6.6 ஓவரில் 67 ரன்காக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ரோஹித் சர்மா 30 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோரில் மந்தநிலை ஏற்பட்டது. ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார் அமித் மிஷ்ரா. அத்துடன் இஷான் கிஷனை (26 ரன்) 7ஆவது விக்கெட்டாக வீழ்த்தினார்.

இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்தது. டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ப்ரித்வீஷா 7 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற ஸ்டீவ் ஸ்மித்துடன் ஷிகர் தவான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டது.

ஷிகர் தவான் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் சாஹர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பொல்லார்ட் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் (33) எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 7 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

இதன் பிறகு ஆட்டம் மெதுவாக மும்பை அணிக்கு சாதகமாக திரும்பியது. ஆனால் இறுதி ஓவர்களில் லலித் யாதவ் - சிம்ரன் ஹெட்மேயர் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றி, டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று (ஏப்ரல் 21) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னையில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

-ராஜ்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

புதன் 21 ஏப் 2021