மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி சென்னையின் 2ஆவது வெற்றி!

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி சென்னையின் 2ஆவது வெற்றி!

மும்பையில் நேற்றிரவு (ஏப்ரல் 19) நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தானை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு (ஏப்ரல் 19) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 12ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் களம் கண்டன. ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் சென்னையைப் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதன்படி ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு பிளிஸ்சிஸ்ஸும் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை ஆரம்பித்த சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பெரிய அளவில் ரன் திரட்ட வேண்டும் என்று நோக்குடன் அதிரடியாக ஆடினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எந்த வீரரும் நீண்ட நேரம் நிலைகொண்டு விளையாடவில்லை.

ருதுராஜ் 10 ரன்னில் வெளியேறினார். ஜெய்தேவ் உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி தூள் கிளப்பிய பிளிஸ்சிஸ் 33 ரன்களில் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். மொயீன் அலி (26 ரன், ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), சுரேஷ் ரெய்னா (18 ரன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), அம்பத்தி ராயுடு (27 ரன், 3 சிக்சர்) ஆகியோரும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

கேப்டன் டோனியின் தடுமாற்றம் இந்த ஆட்டத்திலும் எதிரொலித்தது. 17 பந்தில் 18 ரன் (2 பவுண்டரி) எடுத்த நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் சகாரியாவின் பந்து வீச்சை ஓங்கி அடித்து கேட்ச் ஆகிப்போனார். இறுதிக்கட்டத்தில் வெய்ன் பிராவோவின் அதிரடியால் ஸ்கோர் 180 எட்டியது.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. பிராவோ 20 ரன்களுடன் (8 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. மனன் வோரா (14 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மிடில் வரிசையில் ராஜஸ்தானின் பேட்டிங் வரிசையை சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலியும், ரவீந்திர ஜடோஜாவும் சீர்குலைத்தனர்.

அதிரடி ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் (49 ரன், 5 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் (2 ரன்) இவர்களது சுழல் வலையில் சிக்க அதன் பிறகு அந்த அணியால் நிமிர முடியவில்லை. முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் இந்த முறை டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

20 ஓவர்களில் ராஜஸ்தானால் 9 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை ருசித்தது.

மொயீன் அலி 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்திய ஜடேஜா 4 கேட்ச் செய்து அசத்தினார். சென்னை அணிக்காக டோனி கேப்டனாக ஆடிய 200-வது ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (ஏப்ரல் 20) சென்னையில் நடக்கும் 13ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் சமநிலையில் இருக்கும் மும்பை இந்தியன்ஸும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

செவ்வாய் 20 ஏப் 2021