மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஏப் 2021

ஐபிஎல்: ஹைதராபாத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

ஐபிஎல்: ஹைதராபாத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று (ஏப்ரல் 17) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் ஒன்பதாவது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 17) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - வார்னர் தலைமையிலான சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. இரண்டாவது ஆட்டத்தில் அந்த அணி கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த நிலையில் ஹைதராபாத்தை வீழ்த்தி அணி இரண்டாவது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் களத்தில் இறங்கியது.

ஹைதராபாத் அணி தான் மோதிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி இருந்தது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 10 ரன்களிலும், இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூருவிடம் 6 ரன்களிலும் தோற்ற நிலையில் மைதானத்தில் நுழைந்தது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர்.

இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. இந்த நிலையில் ரோஹித் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். குவிண்டன் டிகாக்(40) முஜீப் பந்து வீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய பொல்லார்ட், அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். 3 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் அடித்த பொல்லார்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக குவிண்டன் டிகாக் 40 ரன்கள் அடித்தார். ஹைதராபாத்தைப் பொறுத்தவரை முஜீப் இரண்டு விக்கெட்டுகள், விஜய் சங்கர் இரண்டு விக்கெட்டுகள், கலீல் அகமது ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி அபாரமான தொடக்கம் பெற்றது. பெர்ஸ்டோ 43 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 36 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. 19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஹைதராபாத் அணி 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் அடித்திருந்த ரன்கள் சவாலானவை என்றே நினைக்கிறேன்.

பவர் பிளேயை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள இரு அணிகளுமே முயற்சி செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நடு ஓவர்களில் நாங்கள் சற்று சிறப்பாக பேட் செய்தோம் என நான் நினைக்கிறேன். இதுபோன்ற மைதானங்களில் அனைத்து வீரர்களும் பல போட்டிகள் விளையாடியுள்ளனர்.

பொல்லார்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது ஃபீல்டிங் அசத்தலாக இருந்தது. போட்டியில் நடந்த ரன் அவுட்கள் மற்றும் கேட்ச்சுகளை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை.

இன்று (ஏப்ரல் 18) இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. சென்னையில் 3 மணிக்குத் தொடங்கும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பையில் 7 மணிக்குத் தொடங்கும் 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 18 ஏப் 2021