மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு!

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்திய பெங்களூரு!

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய (ஏப்ரல் 14) ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆறாவது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

இதில் தேவ்தத் படிக்கல் மூன்றாவது ஓவரில் 11 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விராட் கோலி 4 பவுண்டரிகளை விரட்டி 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஷபாஸ் அகமது (14), டி வில்லியர்ஸ் (1), வாஷிங்டன் சுந்தர் (8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு அரை சதத்தைக் கடந்தார். ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் (59) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். 9 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த சஹா, சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த மனீஷ் பாண்டே, கேப்டன் டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் கடந்தார்.

37 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 54 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் பெங்களூரு வீரர் ஜேமிசன் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஜானி பிரிஸ்டோ 12 ரன்னில் வெளியேறினார். 39 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த மனீஷ் பாண்டே, ஷபாஸ் அகமது பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

இறுதியில் ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியின் ஷபாஸ் அகமது அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்களூரு அணியின் வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

பெங்களூரு அணி தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

இன்று (ஏப்ரல் 15) இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 15 ஏப் 2021