மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

சென்னையில் நேற்று (ஏப்ரல் 13) இரவு நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 5ஆவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மும்பை அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் முதல் ஐந்து ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன் ஆகியோரை மோர்கன் பயன்படுத்தினார். டி காக் (2 ரன்), வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தைத் தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார். ஹர்பஜன் சிங்கின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி ஓடவிட்டார். இதேபோல் பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். கம்மின்சின் பந்து வீச்சில் சிக்சருடன் அரை சதத்தை நிறைவு செய்தார்.

சூர்யகுமார் களத்தில் நின்றது வரை மும்பையின் ஸ்கோர் 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் அவர் வீழ்ந்ததும் நிலைமை தலைகீழானது. அணியின் ஸ்கோர் 86 ரன்களாக (10.3 ஓவர்) உயர்ந்த போது சூர்யகுமார் யாதவ் 56 ரன்களில் (36 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஷகிப்பின் சுழலில் சிக்கினார்.

அடுத்து வந்த இஷான் கிஷன் (1 ரன்) ரன் ரேட்டை அதிகப்படுத்தும் நோக்கில் அவசரகதியில் விளையாடி விக்கெட்டைப் பறிகொடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்சின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா (15 ரன்), பொல்லார்ட் (5 ரன்) அடுத்தடுத்து வெளியேற ரன் வேகம் வெகுவாக தளர்ந்தது. இறுதிக்கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் அவர்களை அச்சுறுத்தினார். கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து ஒரு வழியாக 150 ரன்களை தொட வைத்த குருணல் பாண்ட்யா (15 ரன்) அதே ஓவரில் கேட்ச் ஆனார்.

20 ஓவர்களில் மும்பை அணி 152 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 38 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. கொல்கத்தா தரப்பில் ஆந்த்ரே ரஸ்செல் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் 72 ரன்கள் (8.5 ஓவர்) திரட்டி வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைக்கீழாக மாறியது.

சுப்மான் கில் 33 ரன்னிலும் (24 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிதிஷ் ராணா 57 ரன்னிலும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ராகுல் சாஹரின் சுழற்பந்து வீச்சுக்கு பலியானார்கள். மிடில் ஓவர்களில் அவர் கொடுத்த அழுத்தத்தில் கொல்கத்தா அணியினர் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

திரிபாதி (5 ரன்), கேப்டன் மோர்கன் (7 ரன்), ஷகிப் அல்-ஹசன் (9 ரன்) ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. மும்பையின் பந்து வீச்சில் கடைசி 5 ஓவர்களில் ரன் எடுப்பது எப்படி என்றே தெரியாமல் கொல்கத்தா அணியினர் தடுமாறினர்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. அதிரடி சூரர்கள் தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல் களத்தில் இருந்தனர். பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். அட்டகாசமாக பந்து வீசிய பவுல்ட், ரஸ்செல் (9 ரன்), அடுத்து வந்த கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் மும்பை அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது. சென்னையில் நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது முதலாவது வெற்றியாகும்.

இன்றைய (ஏப்ரல் 14) ஐபிஎல் 6ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னையில் மோதுகின்றன.

-ராஜ்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

புதன் 14 ஏப் 2021