மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி பரபரப்பான வெற்றி பெற்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 12) 4ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இதில் மயங்க் அகர்வால் 14 (9) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 28 பந்தில் (4 பவுண்டரி, 2 சிக்சருடன்) 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார்.

இந்த ஜோடியில் கே.எல்.ராகுல் 30 பந்தில் அரை சதம் அடிக்க, தீபக் ஹூடா 20 பந்தில் (1 பவுண்டரி, 6 சிக்சருடன்) அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடிய தீபக் ஹூடா 64 (28) ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் (7 பவுண்டரி, 5 சிக்சருடன்) 91 ரன்கள் அடித்தார். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக சேட்டன் சகாரியா 3 விக்கெட்டுகளும், கிரிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மணன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் (0) ரன் ஏதுவும் எடுக்காமல் வெளியேற, அவரைத்தொடர்ந்து வோக்ராவும் 12(8) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடி காட்டியது. இதில் ஜோஸ் பட்லர் 25 (13) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 23 (15) ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டிவந்த சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். அடுத்ததாக ரியான் பராக், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களைத் திணறடித்தார். இதனிடையே அதிரடியாக ரன் குவித்து வந்த ரியான் பராக் 25 (11) ரன்களில் வெளியேறினார். தனது அதிரடியைத் தொடர்ந்த சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கடைசி ஒவரில் சஞ்சு சாம்சன் 119 (63) ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி பரபரப்பு வெற்றிபெற்றது.

இன்றைய (ஏப்ரல் 13) 5ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னையில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

-ராஜ்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 13 ஏப் 2021