jகர்ணன் திரையிட்ட தியேட்டர்களில் சோதனை!

entertainment

ஏப்ரல் 9 அன்று கலைப்புலி தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 550 திரைகளில் வெளியிடப்பட்டது

கொரோனா மறுதொற்று பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தும் வகையிலும் மத்திய மாநில அரசுகள் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஏப்ரல் 10 முதல் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பதும் ஒன்று.

கடந்த பல மாதங்களாகக் கர்ணன் வெளியீட்டுக்கான புரொமோஷன் பணிகளை செய்துவந்த தயாரிப்பு தரப்பு உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ‘கர்ணன்’ படத்துக்கு ஏற்படுத்தியிருந்தது. அதனால் வேறு வழியின்றி ஏப்ரல் 9 அன்று திட்டமிட்டபடி, படத்தை வெளியிட்டனர். எதிர்பார்த்ததைக் காட்டிலும் படத்திற்கான வரவேற்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் படம் வெளியான மறுநாள் முதல் 50 சதவிகித இருக்கைகளுக்கான டிக்கெட் மட்டுமே நகர்ப்புறங்களில் உள்ள தனி திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ், சினி பிளக்ஸ் ஆகியவற்றில் தமிழக அரசின் உத்தரவுகள் கறாராகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

புறநகர், சிறுநகரங்களில் உள்ள தியேட்டர்களில் வழக்கம்போல வந்தவர்கள் அனைவருக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டம், தென்மாவட்டங்களில் அபரிமிதமான வரவேற்பும், ஆதரவு அலையும் உச்சத்தில் இருப்பதால் தியேட்டரில் அனுமதி வழங்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான அளவில் படம் பார்க்கப் பார்வையாளர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்துள்ளனர்.

தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவோ, அதிகாரிகளைக் கட்டுப்படுத்தவோ இயலாது என்பதால் அதிகாரிகள் கர்ணன் படம் திரையிட்டுள்ள தியேட்டர்களில் சோதனையிடத் தொடங்கியுள்ளனர்.

மாஸ்டர் படம் வெளியானபோது கோவை மாவட்ட திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாகப் பார்வையாளர்கள் படம் பார்க்க அனுமதித்ததால் வேறு நடவடிக்கை எடுக்காமல் 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்று மூன்று முறை அபராதம் செலுத்தும் தியேட்டர் நான்காவது முறையாக விதிமுறையை மீறினால் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள முடியும்.

இதை முன் உதாரணமாகக்கொண்டு தியேட்டர்களில் வருகிற அனைவருக்கும் அனுமதி என தியேட்டர்கள் செயல்பட்டு வருவதைப் புதுக்கோட்டை தியேட்டர்கள் சோதனையில் கண்டறிந்த அதிகாரிகள் 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதுடன், கடுமையாக எச்சரித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழக அரசு புதிய படங்கள் முதல் ஏழு நாட்களுக்குத் தினசரி ஒரு காட்சியைக் கூடுதலாகத் திரையிட்டுக் கொள்ள ஆணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் தினசரி அதிகாரிகள் சோதனை நடத்தும் திட்டம் இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *