மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

ஐபிஎல்: சென்னையை வீழ்த்திய டெல்லி!

ஐபிஎல்: சென்னையை வீழ்த்திய டெல்லி!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 9 அன்று தொடங்கியது. போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (ஏப்ரல் 10) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இரண்டாவது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர்.

சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றி எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ருதுராஜ் 5 ரன்களில் வெளியேறினார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோயின் அலி - சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்த மோயின் அலி, அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (23 ரன்கள்) ஓரளவு தாக்குப்பிடித்தார். எனினும் மறுமுனையில் சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விளாசி அசத்தினார்.

சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உட்பட 54 ரன்கள் எடுத்து ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி இரண்டாவது பந்தில் ரன் எதுவும் இன்றி போல்டு ஆகி வெளியேறினார். கடைசி கட்ட ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா அதிரடி காட்டினர். குறிப்பாக சாம் கரன் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரன் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில், ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அரை சதம் கடந்து அசத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்த ஜோடியில் பிரித்வி ஷா 72 (38) ரன்களும், ஷிகர் தவான் 85 (54) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 14 (9) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் கேப்டன் ரிஷாப் பண்ட் 15 (12) ரன்களும், ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட்டுகளும், ப்ராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

சென்னையில் இன்று (ஏப்ரல் 11) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

ஞாயிறு 11 ஏப் 2021