மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கர்ணன் : விமர்சனம்!

கர்ணன் : விமர்சனம்!

காலம் காலமாக அதிகார வர்க்கத்தினால் ஒடுக்கப்படும் கிராமம் உரிமைகளுக்காக வெகுண்டெழுந்தால், மக்களுக்காக வாள் ஏந்தி வீரனொருவன் அநீதிக்கெதிராக வாள் சுழற்றினால் அதுவே கர்ணன் திரைப்படம்.

திருநெல்வேலியில் யாரும் அறிந்திராத, அறிந்துகொள்ள விரும்பாத ஊரான பொடியன் குளத்தில் கதை நடக்கிறது. ஊரில் பஸ் நிறுத்தம் வேண்டி காலம் காலமாகப் போராடி வருவார்கள் கிராம மக்கள். தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளால் பேருந்து பயணமென்பதே சவாலாக முன்நிற்க, கிராமத்தின் இளம் தலைமுறை அதைத் தட்டிக் கேட்கிறது. நிற்காமல் செல்லும் பேருந்து ஒரு நாள் நிறுத்தப்படுகிறது. அந்தப் பிரச்சனை பூகம்பமாகிறது. இதனால், அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கும் ஒடுக்கப்பட்ட ஒரு கிராமத்தின் நிலை என்னவானது? மீண்டு எழுந்ததா? ஊருக்குள் பேருந்து வசதி வந்ததா என்பதே கர்ணன் படத்தின் திரைக்கதை.

கிராமங்கள் வழியே பேருந்துகள் ஓடத் துவங்கிய காலக்கட்டத்தில் யாரெல்லாம் வண்டியில் ஏற வேண்டும், எந்த ஊரிலெல்லாம் வண்டி நிற்குமென்பது மிகப்பெரிய அரசியலாக மாறியது. ஒடுக்கு முறைக்கெதிரான உயர்மட்டத்தினரின் நுண் அரசியலை பேருந்தை வைத்து கச்சிதமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞனாக கர்ணன் கதாபாத்திரத்தில் வாள் தூக்கி வந்து நிமிர்கிறார் தனுஷ். ஜாலியான இளைஞனாக, கிராமத்துக்காகக் கோபப்படும் தலைவனாக கச்சிதமாக நடித்திருக்கிறார். அசுரன் போல இந்தப் படமும் தனுஷின் நடிப்புக்கு கிடைத்த பெரும் வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். வசனங்கள் மட்டுமின்றி உடல் மொழியால் கர்ணனுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

தனுஷூக்குக் குருவாக நடிகர் லால் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் வில்லனாக மட்டும் பார்த்துப் பழகியவரை, வேறு ஒரு ஆளாக படத்தில் காட்டியிருக்கிறார்கள். பண்டாரத்தியாக இருந்திருக்க வேண்டிய மஞ்சனத்திக்காகக் காதலால் உருகும் இடமாகட்டும், இளைஞர்களை வழிநடத்தும் இடமாகட்டும், கிழவியின் தலைமீது கொடுத்த அந்த முத்தமாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் அசத்துகிறார்.

உரிமைக்காகப் போராடும் வீரனாக வரும் தனுஷின் பெயர் கர்ணன். கர்ணனின் காதலியாக வரும் ரஜிஷாவின் பெயர் திரெளபதை, அதிகாரவர்க்கத்தின் உருவமாக வரும் போலீஸ் அதிகாரி நட்டியின் பெயர் கண்ணபிரான். ஊர் தலைவரின் பெயர் துரியோதனன். இப்படி, மகாபாரத பாத்திரங்களை தலைகீழாக்கி இருக்கிறார்கள். இலக்கியத்தின் வாயிலாக எளிய மனிதர்களின் கதையை உலாவ விட்டிருப்பது மிகச் சிறப்பு. கர்ணனின் விழியிலிருந்து படம் மேலெழுவதால் கர்ணப்புராணம் என்றே கூட அழைக்கலாம்.

வசனங்களாலும், காட்சிகளாலும் சாதிய, அதிகார ஒடுக்குமுறையை சொல்லி மக்களை அயர்ச்சிக்கு உட்படுத்தாமல் படம் நெடுக குறியீடுகளால் நிறைய விஷயங்களை உணர்த்தியிருக்கிறார்கள்.

கால் கட்டப்பட்ட கழுதை, தலை துண்டிக்கப்பட்ட பெளத்த சிலை, வாளால் மீனை வெட்டுவது, கோழிக்குஞ்சு, நாட்டார் தெய்வம், தலை இல்லாத ஓவியம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

குறிப்பாக, ஊர் நெடுக கால் கட்டப்பட்ட நிலையில் திரியும் கழுதையை தனுஷ் விடுவிக்கும் இடத்தில் தான், கிராமத்தின் எழுச்சி துவங்கும். அதுபோல, நாட்டார் தெய்வமான பேச்சியை படம் முழுக்க ஒரு கதாபாத்திரமாக கொண்டுவந்திருப்பதும் படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. அதோடு, தலை துண்டித்தல் என்பது தொடர்ச்சியாக படமெங்கும் வருகிறது.

பொதுவாக, ஊரில் எதிர்பாராத விதத்தில் இறக்கும் அல்லது கொலை செய்யப்பட்டவர்களை தெய்வமாக்கிவிடுவது வழக்கம். அப்படி, நாட்டார் தெய்வமாக்கப்பட்ட பேச்சி கிராம மக்களின் முன்னேற்றத்தைப் பார்ப்பது, கைதட்டுவது, கொண்டாடுவதென இப்படியான காட்சிப்படுத்துதலானது தமிழ் சினிமாவில் புதியது.

90களில் நடக்கும் கதையென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் படக்குழு மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. சான்றாக, தூக்கு வாளியில் தண்ணீர் குடிக்க கொடுக்கும் வழக்கமானது ஊர்களில் உண்டு. அதில் தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் ஆடு, மாடு, கோழி, பன்றி, குதிரை என மனிதர்களோடு பிற உயிர்களையும் உலாவ விட்டிருக்கிறார்கள்.

மொழிகளைத் தாண்டி நடிப்பால் திரெளபதையாக திரையில் மிளிர்கிறார் மலையாள நடிகை ரஜிஷா. போலீஸ் அதிகாரியாக திமிர் காட்டும் அசுர நடிப்பைத் தந்திருக்கிறார் நட்டி. யோகிபாபு, கெளரி கிஷன், லெட்சுமி ப்ரியா சந்திரமெளலி, பூ ராமு, ஜி.எம்.குமார், பஸ்ஸில் கல் எரிந்த சிறுவன், குதிரைக்கார சிறுவன் என அனைவருமே மனதில் நிறைகிறார்கள். அசத்தல்!

எளிய மனிதர்களின் வாழ்வியலையும், ஊர் மக்களின் பழக்க வழக்கங்களையும் பார்வையாளனுக்குக் கடத்திவிட முன்பாதியில் கொஞ்சம் படம் நீளமாகத் தெரிகிறது. அடுத்தடுத்து வரும் பாடல்களும் படத்தின் வேகத்தைத் தடுத்து நிறுத்துகிறது. இவற்றுக்கெல்லாம் சேர்த்து இரண்டாம் பாதியில் வேறொன்றாக படம் மாறிவிடுகிறது. போர் காட்சியைப் போலவே ஊர் மக்களுக்கும் போலீஸூக்குமான சண்டைக் காட்சியைத் துவங்குமிடம் புல்லரிக்கிறது.

‘விட்ராதீங்க எப்போவ்’ பாடல் வருமிடத்தில் நிச்சயம் சில துளிகளாவது கண்ணீர் விழும். கர்ணனின் போரில் முன்னணியில் நிற்கும் வீரர்களாக சந்தோஷ் நாராயணனின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் இருக்கிறது. படம் கடத்த வேண்டிய உணர்வை இவர்கள் இரட்டிப்பாக்குகிறார்கள்.

ஊருக்கு ஒரு பிரச்னையென்றால் நாயகன் இரட்சகராக இறங்கிவருவதும், நாயகியை வெறும் காதல் தேவதையாக மட்டும் காட்டும் சினிமாவின் பாரம்பரியமானது இந்தப் படத்திலும் அப்படியே நிறைவேறியிருக்கிறது.

நாகரீகம் முன்னேறிவிட்டது, மில்லினியத்துக்குள் இருக்கிறோம். எளிதாக கிடைத்துவிட்ட ஒவ்வொன்றின் பின்னாலும் மிகப்பெரிய வலியும், வேதனையும் நிறைந்த வரலாறு ஒளிந்திருக்கிறது. அப்படியான ஒரு வலிமிகுந்த கதையை பேருந்தைக் கொண்டு சொல்லியிருக்கிறார்கள்.

சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் இன்றும் தொடரும் சூழலில், கலைரீதியாக உணர்வுப்பூர்வமான ஒரு திரைப்படமாக கர்ணகாவியம் தனித்துத் தெரிகிறது. அவசியம் மக்களால் கொண்டாட வேண்டிய படம்.

- தீரன்

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

வெள்ளி 9 ஏப் 2021